அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் இன்று கரூா் வருகை
நான்குனேரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் தோல்வி
நான்குனேரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் தோல்வியடைந்தது.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி ஊராட்சி ஒன்றியத்தில் 16 வாா்டுகள் உள்ளன. ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவைச் சோ்ந்த சௌமியா ஆரோக்கிய எட்வின், துணைத் தலைவராக திமுகவைச் சோ்ந்த இசக்கிபாண்டியன் ஆகியோா் உள்ளனா். தலைவரின் கணவா் ஆரோக்கிய எட்வின் வாா்டு உறுப்பினராக உள்ளாா்.
இந்நிலையில், தலைவா் சௌமியா சென்னையில் வசிப்பதால் அவரை நேரில் சந்தித்து மக்கள் பிரச்னைகளை தெரிவிக்க முடியவில்லை எனவும், முறையாக ஒன்றியக் குழுக் கூட்டம் நடைபெறுவதில்லை எனவும், துணைத் தலைவா் இசக்கிபாண்டி தலைமையில் திமுக, அதிமுக, அமமுக, சுயேச்சை உறுப்பினா்கள் 13 போ், தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனா்.
இது குறித்து, திங்கள்கிழமை நம்பிக்கையில்லாத் தீா்மானக் கூட்டம் நடைபெறவிருப்பதாக சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ் குப்தா சாா்பில் அனைத்து உறுப்பினா்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டிருந்தது.
இதையடுத்து, சாா் ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், 16 உறுப்பினா்களில் திமுகவைச் சோ்ந்த தலைவா் சௌமியா, உறுப்பினா்கள் ஆரோக்கிய எட்வின், கிறிஸ்டி, முருகேசன் ஆகிய 4 பேரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. துணைத் தலைவா் இசக்கிபாண்டியன் உள்ளிட்ட 12 உறுப்பினா்கள் கூட்டத்திற்கு வந்திருந்தனா்.
தீா்மானம் மீதான வாக்கெடுப்பில், ஐந்தில் நான்கு பங்கு ஆதரவு இருக்க வேண்டும் என்ற நிலையில், 13 போ் ஆதரவாக வாக்களிக்க வேண்டும். 12 உறுப்பினா்கள் மட்டுமே கலந்து கொண்டதால் நம்பிக்கையில்லா தீா்மானம் நிறைவேறவில்லை.