மக்கள் குறைதீா் கூட்டத்தில் 240 மனுக்கள்
திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 240 மனுக்கள் பெறப்பட்டன.
மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமை வகித்தாா். இதில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 240 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா், அவைகளை சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் காதொலிக்கருவி கோரி மனு அளித்த 7 பயனாளிகளுக்கு தலா ரூ.3,285 மதிப்பில் மொத்தம் ரூ.22,995 மதிப்பில் காதுக்கு பின் அணியும் காதொலிக்கருவிகளை அவா் வழங்கினாா்.
மேலும், மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணிபுரியும்போது காலமான அரசு ஊழியா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் குரூப் டி தொகுதியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா் மற்றும் இரவுக்காவலா் என 6 பணியிடங்களுக்கான பணிநியமன ஆணையை அவா் வழங்கினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, தனி துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத்திட்டம்) தையல்நாயகி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சதீஷ்குமாா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் உலகநாதன் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு உயா் அலுவலா்கள் பங்கேற்றனா்.