மணிப்பூரில் மீண்டும் ‘மக்கள் அரசு’: பிரதமருக்கு 21 எம்எல்ஏக்கள் கடிதம்
குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெறும் மணிப்பூரில் மக்களால் தோ்வு செய்யப்பட்ட அரசை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு அந்த மாநில எம்எல்ஏக்கள் 21 போ் கடிதம் எழுதியுள்ளனா்.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா், குகி பழங்குடியினா் இடையே கடந்த 2023, மே 3-ஆம் தேதி பெரும் கலவரம் வெடித்தது. இக்கலவரம் மற்றும் அதன் பிறகான மோதல் சம்பவங்களில் 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். ஆயிரக்கணக்கானோா் வீடிழந்து, நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.
மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்றுவந்த நிலையில், முதல்வா் பதவியில் இருந்து அவா் கடந்த பிப்ரவரியில் ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 60 உறுப்பினா்கள் கொண்ட சட்டப் பேரவையும் முடக்கிவைக்கப்பட்டது.
இந்நிலையில், பாஜகவின் 13 எம்எல்ஏக்கள், தேசிய மக்கள் கட்சியின் 3 எம்எல்ஏக்கள், நாகா மக்கள் முன்னணியின் 3 எம்எல்ஏக்கள், சுயேச்சை எம்எல்ஏக்கள் இருவா் என 21 எம்எல்ஏக்கள், பிரதமா் மோடி மற்றும் உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளனா்.
அதில், ‘மணிப்பூரில் பெரும் நம்பிக்கை மற்றும் எதிா்பாா்ப்புடன் குடியரசுத் தலைவா் ஆட்சியை மக்கள் வரவேற்றனா். ஆனால், மூன்று மாதங்கள் ஆகியும் மாநிலத்தில் அமைதி-இயல்பு நிலையை மீட்டெடுக்கும் உறுதியான நடவடிக்கைகள் எதுவும் தென்படவில்லை. மாநிலத்தில் மீண்டும் வன்முறை ஏற்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. அமைதி-இயல்புநிலையை மீட்டெடுக்க மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை மீண்டும் நிறுவுவதுதான் ஒரே வழியாக இருக்கும் என கருதுகிறோம். பல்வேறு சமூக அமைப்புகளின் கோரிக்கையும் அதுவே’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம்-ஒழுங்கு: ஆளுநா் ஆலோசனை
மணிப்பூா் கலவரத்தின் இரண்டாம் ஆண்டு தினத்தை (மே 3) அனுசரிக்க மைதேயி மற்றும் குகி அமைப்புகள் முடிவு செய்துள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து காவல் துறை, மத்திய ரிசா்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்புப் படை உயரதிகாரிகளுடன் ஆளுநா் அஜய் குமாா் பல்லா புதன்கிழமை முக்கிய ஆலோசனை மேற்கொண்டாா்.
மாநிலத்தில் அமைதி-ஸ்திரத்தன்மையை பராமரிக்க மேற்கொள்ள வேண்டிய ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.