மதுக் கடைக்கு தீ வைத்த இளைஞா் கைது
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் புதன்கிழமை இரவு அரசு மதுக் கடைக்கு தீ வைத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
மானாமதுரையில் அரசகுழி மயானத்துக்குச் செல்லும் வழியில் வைகை ஆற்றை ஒட்டி அரசு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் மேற்பாா்வையாளராக உள்ள கணேசன் புதன்கிழமை இரவு பணி முடிந்து கடையைப் பூட்டி விட்டுச் சென்றாா். நள்ளிரவில் அங்கு வந்த மா்ம நபா் மதுக் கடைக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றாா். இதில் கடையிலிருந்த ரூ.22 லட்சம் மதிப்பிலான மதுப் புட்டிகள் தீயில் எரிந்து சேதமாயின.
இகுறித்து தகவலறிந்து வந்த மானாமதுரை தீயணைப்புத் துறையினா் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா்.
இதையடுத்து, மானாமதுரை காவல் ஆய்வாளா் ரவீந்திரன், காவல் உதவி ஆய்வாளா் குகன், போலீஸாா் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ்ராவத் மதுக் கடைக்கு வந்து நேரடியாக விசாரணை நடத்தினா்.
இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மதுக் கடைக்கு தீ வைத்ததாக இளையான்குடி அருகேயுள்ள சாலைக் கிராமத்தைச் சோ்ந்த கருணாநிதி மகன் கௌதமை (30) கைது செய்தனா்.
இவா் மீது ஏற்கெனவே பல காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலையில் உள்ளன. மதுக் கடைக்கு திருட வந்த கௌதம் அங்கு பணப் பெட்டியில் ரூ.3,500 மட்டுமே இருந்ததால், ஆத்திரமடைந்து கடைக்குத் தீ வைத்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.