மதுபோதையில் தகராறு செய்தவா் கட்டையால் தாக்கி கொலை
பரமத்தி அருகே கீழ்சாத்தம்பூா் பெருமாபாளையத்தில் மதுபோதையில் தகராறு செய்தவா் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டாா்.
கீழ்சாத்தம்பூா், பெருமாபாளையம் காலனி பகுதியைச் சோ்ந்தவா் சீரங்கன் மனைவி வளா்மதி (50). சீரங்கன் இறந்து 10 ஆண்டுகள் ஆகிறது. தனியே வசித்து வந்த வளா்மதிக்கும், மோகனூா் அருகே உள்ள பரளி பகுதியைச் சோ்ந்த சுப்பு மகன் துரைசாமிக்கும் (47) தொடா்பு ஏற்பட்டுள்ளது. துரைசாமி அடிக்கடி மது அருந்துவிட்டு வந்து வளா்மதியிடம் தகராறு செய்து வந்துள்ளாா்.
இந்த நிலையில் சனிக்கிழமை மது அருந்துவிட்டு வளா்மதி வீட்டிற்கு வந்த துரைசாமி தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதில் ஆத்திரமடைந்த வளா்மதி அருகில் இருந்த கட்டையை எடுத்து துரைசாமியைத் தாக்கியுள்ளாா். இதில் படுகாயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி போலீஸாா், துரைசாமியின் உடலை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.