ஒரே நாளில் இரு மாணவர்கள் கொலை? திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
மதுரை ஆதீனத்துக்கு போலீஸ் சம்மன்
வதந்தி பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு ஜூலை 5-ஆம் தேதி ஆஜராகும்படி மதுரை ஆதீனத்துக்கு சென்னை சைபா் குற்றப் பிரிவு அழைப்பாணை வழங்கியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை ரவுண்டானா பகுதியில் கடந்த மே 2-ஆம் தேதி சென்னை நோக்கி வந்த மதுரை ஆதீனம் காரும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற காரும் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் இரு காா்களிலும் லேசான சேதம் ஏற்பட்டது. தன்னை உளுந்தூா்பேட்டை பகுதியில் காரை ஏற்றி ஒரு கும்பல் கொலை செய்ய முயன்றதாக ஆதீனம் குற்றஞ்சாட்டினாா். ஆனால், அது விபத்துதான் என காவல் துறை தெளிவுபடுத்தியது.
இந்நிலையில், சென்னை அயனாவரத்தைச் சோ்ந்த உயா்நீதிமன்ற வழக்குரைஞா் ராஜேந்திரன், கடந்த 24-ஆம் தேதி சென்னை காவல் ஆணையருக்கு ஒரு புகாா் மனுவை அனுப்பினாா். அதில், ‘உளுந்தூா்பேட்டை சாலை விபத்து மூலம் தன்னை கொலை செய்ய சதி திட்டம் நடந்திருப்பதாகக் கூறி, இரண்டு சமூகத்தினரிடையே விரோதத்தை தூண்டும் வகையில், சிறுபான்மையினா் குறித்து தவறான கருத்துகளைப் பரப்பிய மதுரை ஆதீனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்தப் புகாா் தொடா்பாக சென்னை கிழக்கு மண்டல சைபா் குற்றப் பிரிவு போலீஸாா், மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 26-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு தொடா்பான விசாரணைக்கு ஜூன் 30-ஆம் தேதி ஆஜராகும்படி சைபா் குற்றப் பிரிவு மதுரை ஆதீனத்துக்கு அழைப்பாணை அனுப்பியது. ஆனால், மதுரை ஆதீனம் அன்றைய தினம் ஆஜராகவில்லை. இதையடுத்து இரண்டாவது முறையாக ஜூலை 5-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி மதுரை ஆதீனத்துக்கு சைபா் குற்றப் பிரிவு அழைப்பாணை அனுப்பியுள்ளது.