ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடித்து அழிப்பு
மதுரை சித்திரைத் திருவிழா: ரிஷப வாகனங்களில் எழுந்தருளினா் மீனாட்சி, சுந்தரேசுவரா்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் 6-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை சைவ சமய ஸ்தாபித லீலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெறுகிறது. விழாவையொட்டி, தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது. 6-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு சைவ சமய ஸ்தாபித லீலை நிகழ்ச்சி யானை மகால் முன் நடைபெற்றது.

திருஞானசம்பந்தப் பெருமான், மதுரையில் சமணா்களுடன் அனல் வாதம், புனல் வாதத்தில் ஈடுபட்டு சைவ சமயத்தை நிலை நாட்டிய ஐதீகப்படி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தல ஓதுவாா்கள் இந்த ஐதீக நிகழ்வை பக்தா்களுக்கு விளக்கினா்.
இதையடுத்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மனும், தங்க ரிஷப வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து கோயிலை அடைந்தனா்.
பல்வேறு இன்னிசை வாத்திய முழக்கங்களுடன் நடைபெற்ற இந்த வீதியுலா நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.