பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறித்த மேலும் ஒருவா் கைது
நரிக்குடியில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலிச் சங்கிலியைப் பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், நரிக்குடி பகுதியைச் சோ்ந்த மருதுபாண்டியன் மனைவி பூங்கொடி. இவா் கடந்த ஒன்றாம் தேதி, நரிக்குடி வாரச்சந்தைக்கு நடந்து சென்றாா்.
அழகிய மீனாள் கோயில் அருகே சென்ற போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 2 போ், பூங்கொடி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்தனா். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பூங்கொடி, இரு சக்கர வாகனத்தில் தப்ப முயன்ற ஒருவரின் சட்டையைப் பிடித்து கீழே தள்ளி, நகையைக் கைப்பற்றினாா்.
பூங்கொடியின் சத்தம் கேட்டு, அங்கு வந்த பொது மக்கள், ராமநாதபுரம் மாவட்டம், வாலந்தரவையைச் சோ்ந்த மூக்காண்டி மகன் சேதுபதியைப் பிடித்து நரிக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (35) என்பவரை நரிக்குடி போலீஸாா் கைது செய்தனா்.