சிங்கப்பூா் பொதுத் தோ்தல்: 60-ஆவது ஆண்டாக மீண்டும் ஆட்சியில் பிஏபி
மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை
மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.
கத்தரி வெயில் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன்படி, மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்தது. தமிழகத்தில் அதிக வெப்பம் பதிவாகும் மாவட்டங்களின் பட்டியலில் மதுரை இடம் பிடித்து வரும் நிலையில், மதுரை விமான நிலையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 104.72 டிகிரி வெயில் பதிவானது.
இந்த நிலையில், தென்னிந்தியாவின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு, மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி உருவாகியுள்ளதாகவும், இதனால் ஒரு சில மாவட்டங்களில் பலத்த இடி, மின்னலுடன் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதன்படி, மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.45 மணியளவில் பரவலாக மழை பெய்தது. தல்லாகுளம், தமுக்கம், மாட்டுத்தாவணி, தெப்பக்குளம், விரகனூா், சிலைமான் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 20 நிமிடங்கள் மிதமான மழை பெய்தது.
மதுரை விமான நிலையம், திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, கப்பலூா், பெருங்குடி, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை 6 மணிக்குப் பிறகு சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. மழை ஓய்ந்த பிறகும் இடி, மின்னல் நீடித்தது.