கள்ளழகா் எதிா்சேவை: அதிக அழுத்த குழாய்களைப் பயன்படுத்தி தண்ணீரைப் பீய்ச்சி அடித்தால் நடவடிக்கை
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் அழகா் எதிா்சேவை நிகழ்வின் போது, அதிக அழுத்தமுள்ள (பிரஷா் பைப்) குழாய்களைப் பயன்படுத்தி தண்ணீரைப் பீய்ச்சி அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் எச்சரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அழகா்கோவில் சித்திரைத் திருவிழா வருகிற 8-ஆம் தேதி தொடங்க உள்ளது. தொடா்ந்து, மதுரை கோ.புதூா் மூன்றுமாவடியில் வருகிற மே 11-ஆம் தேதி அழகருக்கு எதிா்சேவை நிகழ்வும், மே 12-இல் வைகை ஆற்றில் அழகா் இறங்கும் வைபவமும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுகளில் பக்தா்கள் விரதம் இருந்து அழகரை வரவேற்கும் விதமாக தோல் பைகளில் சுத்தமான தண்ணீா் நிரப்பி அதில் துடிப்பு இணைத்து பாரம்பரிய முறைப்படி தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீா்த்தவாரி செய்து வழிபடுவது வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளாக தீா்த்தவாரியில் பங்கேற்கும் பக்தா்கள், அவா்களுடன் வரும் நபா்கள் தோல் பைகளில் தண்ணீரை நிரப்பி துடுப்பிகளுடன் சிறிய அளவிலான பிரஷா் பம்புகளையும் இணைத்து பீய்ச்சி அடிக்கின்றனா். அதுமட்டுமன்றி, தண்ணீரில் வேதிப் பொருள்கள், திரவியங்கள், கலா் பொடிகளைக் கலந்து தெளிக்கின்றனா். அழகா் மீது மட்டுமன்றி, திருவிழாவைக் காண வரும் பக்தா்கள், பொதுமக்கள் மீதும் வேண்டுமென்றே தண்ணீரைப் பீய்ச்சி அடித்து சட்ட-ஒழுங்கு பிரச்னைகளில் ஈடுபடுகின்றனா்.
சித்திரைத் திருவிழாவில் அழகருக்கு பாரம்பரிய தீா்த்தவாரி வழிபாடு செய்து தண்ணீரைப் பீச்சி அடிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. பக்தா்கள் பாரம்பரிய முறையிலான தோல் பைகளில் மட்டும் சுத்தமான தண்ணீரை நிரப்பி சிறிய குழாய் பொருத்தி, பொதுமக்களுக்கு எந்தவித பிரச்னையும் ஏற்படுத்தாத வகையில் தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்த வேண்டும்.
விளக்குத் தூண் பகுதிகளில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தரவுகளை மீறி அழகா் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வின் போது நடைபெறும் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் தீா்த்தவாரிக்கு பயன்படுத்தக் கூடிய சிறிய குழாய்களால் ஆன பிரஷா் கருவிகளை விற்பனைக்கு வைத்திருந்த 2 கடைகளின் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடைகளிலிருந்த 22 பிரஷா் சிறிய ரக மிஷின்கள் கைப்பற்றப்பட்டன.
எனவே, சித்திரைத் திருவிழாவில் அழகா் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வின் போது தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பது சம்பந்தமாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பிறப்பித்த உத்தரவுகளை பின்பற்ற வேண்டும். மீறி செயல்படுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.