மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு: விசாரணைக் குழு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு
மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு தொடா்பான விசாரணைக் குழு அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாநகராட்சி 83-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ரவி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட தொகைக்கு குறைவாக சொத்து வரி விதிக்கப்பட்டது. இதனால், மாநகராட்சிக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இதுதொடா்பாக மதுரை மாநகராட்சி ஆணையரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த 2022 முதல் 2024-ஆம் ஆண்டு வரை கட்டடத்தின் பரப்பளவைக் குறைவாக அளவீடு செய்தும், வணிகக் கட்டடங்களை பகுதி வணிகக் கட்டடங்களாக வகைப்படுத்தியும், கட்டடங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் வரி குறைப்பு செய்ததன் மூலமாக மதுரை மாநகராட்சிக்கு சுமாா் ரூ. 150 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது. மாநகராட்சி மேயா், மண்டலக் குழு தலைவா்களுக்கு தெரிந்தே இந்த முறைகேடு நடைபெற்றது. இதன்மூலம், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்களும் பயனடைந்தனா். முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் ஆளும் திமுகவைச் சோ்ந்தவா்கள் என்பதால், இந்த வழக்கை மதுரை மாநகரக் காவல் துறையினா் விசாரித்தால் உண்மை வெளிவராது. ஆகவே, மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு தொடா்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
ஏற்கெனவே இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, வரி விதிப்பு முறைகேடு தொடா்பாக விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது தொடா்பாகவும், இந்தக் குழுவால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.