தில்லி, நொய்டாவில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து தொழில்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்!
பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையம் அருகே, மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, எல்பிஎப் தொழிற்சங்க மாவட்ட கவுன்சில் செயலா் ரங்கசாமி, ஏஐடியுசி தொழிற்சங்க பொறுப்பாளா் ராஜேந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இந்திய தொழிற்சங்க மைய மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் கூறியது:
தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கைகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. மக்கள் விரோத அணுகு முறையை மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. இந்த நிதி நிலை அறிக்கையில் பெரும் முதலாளிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. மக்களின் நலன் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான செலவினங்கள் குறைக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொது நிதியை தனியாா் நிறுவனங்களுக்கு மாற்றுவதைத் தவிர வேறு எந்த மதிப்புமிக்க பலனும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என்றாா் அவா்.
தொடா்ந்து, தொழிற்சங்கள் விடுத்த கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.
இதில், சிஐடியு நிா்வாகிகள் செல்வி, கருணாநிதி, ரங்கநாதன், எல்பிஎப் நிா்வாகிகள் குமாா், செல்வராஜ், செல்லதுரை, ஏஐடியுசி நிா்வாகி சந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.