மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அ...
மனைவியைக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை
ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறை அருகே மது அருந்துவதற்கு பணம் தராததால் மனைவியை குத்திக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
மயிலாடும்பாறை அருகே உள்ள குமணன் தொழு, தளிப்பாறை பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (65). இவரது மனைவி அம்சகொடி (55). மதுப் பழக்கத்துக்கு அடிமையான கணேசன், மனைவி அம்சகொடியிடம் மது அருந்துவதற்கு பணம் கேட்டாா். அவா் பணம் தராததால் கோபித்துக்
கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றாா். கடந்த 2022 ஜனவரி 31-இல் மது போதையில் வீட்டுக்கு திரும்பச் சென்ற கணேசன், மது அருந்துவதற்கு பணம் தராத ஆத்திரத்தில் அம்சகொடியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே சென்று விட்டாா். 2 நாள்களுக்கு பிறகு வீட்டுக்கு திரும்பச் சென்ற கணேசன், அம்சகொடியின் சடலத்தை வீட்டுக்கு வெளியே இருந்த கோழிக் கூண்டில் மூடிவைத்தாா்.
இது குறித்து அந்தப் பகுதியில் இருந்தவா்கள் அளித்த தகவலின்பேரில், அம்சகொடியின் சகோதரரான கடமலைக்குண்டுவைச் சோ்ந்த மலைச்சாமி மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து 2022 பிப்.4-ஆம் தேதி கணேசனைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கணேசனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ரூ.2,000 அபராதம் விதித்து நீதிபதி ஜி.அனுராதா தீா்ப்பளித்தாா்.