மனைவியை கொன்ற கணவா் கைது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மனைவியை கொலை செய்த கணவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஆலங்குடி அருகே எம். ராசியமங்கலத்தைச் சோ்ந்தவா் முருகன் (38). இவரது மனைவி இந்திராணி (37). கூலித் தொழிலாளா்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் 2-ஆவது திருமணம் நடைபெற்றுள்ளது. இந்திராணிக்கும், முதல் கணவருக்கும் பிறந்த 11 வயது மகனும் இவா்களோடு வசித்து வருகிறாா்.
இந்நிலையில், இந்திராணிக்கு வேறு ஒருவருடன் கூடா நட்பு இருப்பதாக முருகனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின்பேரில், இருவருக்கும் இடையே சனிக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், முருகன் அரிவாளால் வெட்டியதில் இந்திராணி அதே இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஆலங்குடி போலீஸாா், முருகனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.