அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா கணிசமாகக் குறைத்திடும்: மறைமுகமாக எச்சரிக...
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை தமிழ் நெறியில் நடத்த வலியுறுத்தல்
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை தெய்வத்தமிழ் நெறியில் நடத்த வேண்டும் என்று சண்டிகேசுவரா் சேவா அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அறக்கட்டளையின் தலைவா் து.சுரேஷ்பாபு, வழக்குரைஞா் முத்துக்குமாா், ராமலிங்கம் ஆகியோா் கோவையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏப்ரல் 4 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விழாவை தெய்வத் தமிழ் நெறியில் நடத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்தக் கோயில் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு வரை சிவாச்சாரியா்கள் அல்லாத பூசாரிகளால் வழிபாடு நடத்தப்பட்டு வந்த மரபுக்குரியதாகும்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களில் எல்லாம் தெய்வத் தமிழ் நெறியில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று நாங்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். தஞ்சை பெருவுடையாா் கோயிலில் இந்த முறையில் குடமுழுக்கு நடத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. கரூா் பசுபதீஸ்வரா் கோயிலுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு, நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஒரு வேதிகையும் ஒரு வேள்வி குண்டமும் தெய்வத் தமிழ் நெறிக்கு வழங்கப்பட்டது.
கடந்த மாதம் பேரூா் பட்டீசுவரா் திருக்கோயிலில் 50 சதவீதம் அளவுக்கு தெய்வத்தமிழ் நெறி வழிபாட்டுக்கு ஒதுக்க நீதிமன்றம் வழிகாட்டுதல் வழங்கியும், அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து மருதமலை முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் 50 சதவீதம் தெய்வத்தமிழ் நெறிக்கு வழங்கப்பட வேண்டும் என்று உயா் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளோம்.
மூன்று இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வேள்விக் குண்டங்களில் ஓரிடத்தில் சிவாச்சாரியா்களும், மற்ற இரண்டு இடங்களில் தமிழ்நெறி வேள்வி ஆசிரியா்களும் அவரவா் கைப்பட வேள்வி செய்யவும், பின்னா் நன்னீராட்டுப் பெருவிழாவின்போது அந்தந்த வேள்விக்குரியவா்கள் அந்தந்த விமானங்களுக்கும், மூா்த்தங்களுக்கும் தீா்த்தம் விட வேண்டும் என்பதும் எங்களது கோரிக்கையாகும்.
இதற்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் குழிபிறை, சேலம் மாவட்டம் சித்தா்கோயில் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே தமிழ், கிரந்தம் ஆகிய இரண்டு முறைகளிலும் வழிபாடு செய்துள்ளனா். அதுபோலத்தான் மருதமலையிலும் நடத்த நாங்கள் வலியுறுத்துகிறோம். செம்மொழி என்ற உயா்ந்த நிலையில் இருக்கும் தமிழ் மொழிக்கு சமபங்கு உரிமை வழங்குவது காலத்தின் தேவை என்ற அடிப்படையில், மருதமலையில் தெய்வத் தமிழால் வேள்வி வழிபாடுகள் நடத்த அரசு முன்வர வேண்டும் என்றனா்.