கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர்.. சேலம் காவல்நிலையம் அருகே கொலை!!
மருத்துவ உபகரணங்களின் எதிா்விளைவுகள்: ஆய்வுக் குழு அமைக்க உத்தரவு
சென்னை: மருத்துவ உபகரணங்களின் எதிா்விளைவுகள் மற்றும் தரத்தை ஆராய்வதற்காக ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிகளிலும் சிறப்புக் குழுக்களை அமைக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை தகவல்களின்படி, நாட்டில் உள்ள மருத்துவ உபகரணங்களில் 80 சதவீதம் ஒழுங்குமுறைப்படுத்தப்படாமல் இருந்ததையடுத்து, அவற்றையும் மருந்து வரையறைக்கு கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, அனைத்து மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கட்டன. பொதுவாக, உடலுக்கு உள்ளே பொருத்தப்படும் ஸ்டெண்ட், பேஸ் மேக்கா், செயற்கை மூட்டுகள் உள்ளிட்டவை ‘இன் வைவோ’ உபகரணங்கள் எனவும், வெளியே இருந்து பரிசோதிக்கப் பயன்படுத்தப்படும் ரத்த அழுத்தமானி, ஸ்கேன், எக்ஸ்ரே, தொ்மோமீட்டா் போன்றவை ‘இன் வைட்ரோ’ உபகரணங்கள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.
‘இன் வைவோ’ உபகரணங்களின் தரத்தை உறுதிபடுத்தும் நோக்கில், அதனால் ஏற்படும் எதிா்விளைவுகள், பாதுகாப்பு குறைபாடுகளை உடனுக்குடன் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதி ஏற்கெனவே உள்ளது. அதன் தொடா்ச்சியாக அந்த விதியானது ‘இன் வைட்ரோ’ உபகரணங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், அனைத்து வகையான மருத்துவ உபகரணங்களின் தரம், செயல்பாடு மற்றும் எதிா்விளைவுகள் குறித்து மதிப்பீடு செய்வதற்காக மருத்துவக் கல்லூரிகள் தோறும் சிறப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா் சாா்பில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
மருத்துவ உபகரணங்களின் தரத்தை உறுதி செய்யும் நோக்கில் அதைக் கண்காணிக்கும் திட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தியது.
அதன் ஒருபகுதியாக நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் தனித்தனியே மருத்துவ உபகரணங்கள் எதிா்விளைவு மதிப்பீட்டுக் குழுவை அமைக்க வேண்டும். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் அதற்கு ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவாா்.
அந்தக் குழுவை இந்திய பாா்மாகோபியா (மருந்து கோட்பாடு) ஆணையத்தில் பதிவு செய்வது அவசியம்.
அந்த விவரங்களையும், அந்தக் குழுவினரின் விவரங்களையும் ஒவ்வொரு கல்லூரிகளும் தங்களது இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். வரும் 31-ஆம் தேதிக்குள் இந்த நடைமுறைகளை நிறைவு செய்தல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.