'மலக்குழி மரணம்; புகாரளிக்க சென்றவர்களை அலைக்கழித்த காவல்துறை' - சென்னை சூளைப்பள்ள துயரம்
சென்னை சூளைப்பள்ளத்தின் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள கண்ணகி தெருவில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பட்டாபிராமன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறார். அவரின் இறப்பை 'மலக்குழி மரணம்' என முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல்துறை தாமதப்படுத்தியிருக்கிறது. மேலும், புகார் அளிக்க வந்தவர்களை அலைக்கழிக்கவும் செய்திருக்கிறார்கள். இதுசம்பந்தமாக தகவல் கிடைக்கப்பெற்றவுடன் சம்பந்தப்பட்டவர்களை தொடர்புகொண்டோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில்தான் இறந்தவருக்காக போராடி FIR ஐ பதிவு செய்ய வைத்திருக்கிறார்கள். களத்தில் நின்ற தீண்டாமை ஒழிப்பு முன்னணியை சேர்ந்த கந்தன் மற்றும் நடராஜன் ஆகியோரிடம் பேசினேன். 'கண்ணகி தெருவில் செப்டிங் டேங்க் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் ஒன்றுகூடி நான்கு துப்புரவு தொழிலாளர்களை அடைப்பு எடுக்க அழைத்திருக்கிறார்கள். 7000 ரூபாய் சம்பளமாகவும் பேசியிருக்கிறார்கள். முதல் இரண்டு நாள் வேலை முடிந்தவுடன் 3000 ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. அடைப்பு அதிகம் இருப்பதால் இதற்கு மேல் எடுக்க முடியாதென தொழிலாளர்கள் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், மீதமுள்ள அடைப்பையும் எடுத்தால்தான் பேசிய தொகையை தருவோம் என மக்கள் தரப்பில் சொல்லியிருக்கிறார்கள்.
வேறு வழியில்லாமல் நால்வரும் மூன்றாவது நாளாக நேற்றும் அடைப்பு எடுக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள். அப்போதுதான் பட்டாபிராமன் குழிக்குள் இருந்தபடியே ஒரு நீண்ட கம்பியை வைத்து அடைப்பை எடுக்க முயன்றிருக்கிறார். மேலே மின்சார வயர்கள் தாழ்வாக சென்று கொண்டிருந்ததால் கம்பி அதில் பட்டு மின்சாரம் தாக்கி செப்டிக் டேங்குக்குள்ளேயே உயிரிழந்திருக்கிறார். முதலில் சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் வாரியம் இந்த செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணிகளையெல்லாம் செய்திருக்க வேண்டும். அவர்களின் தொடர்ச்சியான மெத்தனப் போக்கால்தான் மக்கள் தாங்களாகவே தொழிலாளர்களை நியமித்து வேலையை செய்ய முயன்றிருக்கிறார்கள்.
பட்டாபிராமன் நேற்று காலை 9 மணிக்கே இறந்துவிட்டார். தமிழக அரசு 2013 ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கும் ஒரு அரசாணையின்படி மலக்குழி மரணத்திற்கு 30 லட்ச ரூபாய் வரை இழப்பீடாக பெற முடியும். ஆனால், காவல்துறை மலக்குழி மரணமென குறிப்பிட்டு வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நேற்று காலையிலிருந்தே அதற்காக முயன்றோம். இறந்துபோன பட்டாபிராமனின் மச்சான்கள்தான் காவல்நிலையத்தில் புகாரளிக்க சென்றனர். என்ன நடந்தது ஏது நடந்தது என நான்கு பக்கங்களுக்கு விரிவாக புகார் எழுதிச் சென்றார்கள். இவ்வளவு பெரிதாகவெல்லாம் புகார் எழுதக்கூடாது. ஒரே பக்கத்தில் எழுதி வாருங்கள் என R10 எம்.ஜி.ஆர் நகர் காவல்துறையினர் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
அடுத்ததாக வக்கீலுடன் சென்றிருக்கிறார்கள். வக்கீல் புகாரை எழுதிக் கொடுத்திருக்கிறார். அதையும் ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கின்றனர். வக்கீல் எப்படி புகார் எழுதிக் கொடுக்கலாம் என அர்த்தமற்ற வாதத்தை வைத்திருக்கின்றனர். அந்தத் தொழிலாளி இறந்த போன புகாரை வாங்கவே காவல்துறை அலைக்கழித்திருக்கிறது. 'மலக்குழி மரணம்' என வழக்குப் பதிவு செய்தால் அரசுக்கு அவமானம் என நினைக்கிறார்கள். அதனால்தான் தாமதப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போகிறோம் என பேசிய பிறகு வழக்குப்பதிவு செய்ய முன் வந்தார்கள். அதன்பிறகும் புகார் மனுவில் ஏகப்பட்ட திருத்தங்களை சொல்லி தாமதப்படுத்தி இன்று மதியம் 12 மணிக்குதான் FIR நகலையே கொடுத்தார்கள்.
மலக்குழியில் மரணித்த ஒரு அப்பாவி தொழிலாளியின் இறப்பை உள்ளதை உள்ளபடியாக பதிவு செய்யவே 24 மணி நேரத்திற்கும் மேலாக திண்டாட வேண்டியிருக்கிறது. பட்டாபிராமனுக்கு 48 வயதாகிறது. அவருக்கு குழந்தைகள் இல்லை. மனைவி மட்டும்தான். அவரும் இரண்டு கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளி. மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். வழக்கைப் பதிவு செய்ய தாமதப்படுத்தியதை போல இழப்பீட்டை வழங்கவும் தாமதப்படுத்திவிடக் கூடாது.' என்றனர் ஆதங்கமாக.
மலக்குழி மரணங்கள் ஒரு அரசாங்கம் வெட்கி தலைகுனிய வேண்டிய அவலம். அதை அரசு இயந்திரங்கள் மூடி மறைக்க முற்படுவது கொடுங்கோண்மை.!
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!