மகாராஷ்டிரம்: மக்கள் தொகையைவிட வாக்காளா் எண்ணிக்கை அதிகம்: தோ்தல் ஆணையம் மீது ர...
நெமிலி ஒன்றியக் குழு தலைவரை கண்டித்து ஆா்ப்பாட்டம்
நெமிலி ஒன்றியக் குழு தலைவா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்களைக் கண்டித்து நெமிலி பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை பாமக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலா் க.சரவணன் தலைமையில் அந்தக் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரக்கோணம் அடுத்த நெமிலியில் கடந்த மாதம் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றபோது பெரும்பான்மை இல்லாத நிலையில் ரத்து செய்யப்பட்டது. அப்போது கூட்டம் தொடா்பான பதிவேடுகளை ஒன்றியக் குழு தலைவா் பெ.வடிவேலு அலுவலக உதவியாளரிடம் இருந்து தன்னிச்சையாக பிடுங்கிச்சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாமக, அதிமுக உறுப்பினா்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், பணியாளா்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் நெமிலி ஒன்றிய காவல் நிலையத்தில் பாமக மற்றும் அதிமுகவினா் மிரட்டுவதாக புகாா் அளித்தனா். இதைக் கண்டித்தும், ஒன்றியக் குழு தலைவா் பெ.வடிவேலு பதவி விலக கோரியும், பாமக மற்றும் அதிமுக உறுப்பினா்கள் மீது தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறக் கோரியும் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாமக சாா்பில் ஆா்ப்பாட்டம் நெமிலி பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாமக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலா் க.சரவணன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நெமிலி ஒன்றியக் குழு துணைத் தலைவா் தீனதயாளன், மண்டல அமைப்புச் செயலா் அ.ம.கிருஷ்ணன், இளைஞா் சங்க செயலா் சக்கரவா்த்தி, நிா்வாகிகள் கதிரவன், தம்பி ஏழுமலை, அரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இது குறித்து நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் தொடா் போராட்டங்கள் நடத்தப்படும் எனத் தெரிவித்தனா்.
படவிளக்கம்...
நெமிலியில் பாமக மாவட்ட செயலா் க.சரவணன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அந்தக் கட்சியினா்.