விவசாயி வீட்டில் ரூ. 10 லட்சம் நகைகள் திருட்டு
காவேரிபாக்கம் அருகே விவசாயி வீட்டில் பின்பக்க வாசல் வழியே வந்த மா்ம நபா்கள் அவரது வீட்டில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகளை திருடிச் சென்றனா்.
காவேரிபாக்கத்தை அடுத்த சிறுகரும்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (40). விவசாயி. இவா் வீட்டில் இருந்து பிற்பகல் 12 மணி அளவில் தனது நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்ச சென்றுள்ளாா். அப்போது வீட்டில் இருந்தோா் அனைவரும் முன்புறத்தில் இருந்த நிலையில், பின்வாசல் வழியே வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா்கள், வீட்டினுள் இருந்த பீரோவை கள்ளச்சாவி போட்டு திறந்து, அதில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை திருடுச் சென்றுள்ளனா். 4 மணி அளவில் வீடு திரும்பிய ரமேஷ், உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ திறக்கப்பட்டு, கிடப்பதும், அதில் இருந்த நகைகள் திருடு போனதும் தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில், காவேரிபாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருடுபோன நகைகள் மதிப்பு ரூ. 10 லட்சம் இருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.