உதவி மின்பொறியாளா் அலுவலகம் இடமாற்றம் செய்வதை கண்டித்து மறியல்
பெரியாங்குப்பம் கிராமத்திலிருந்து உதவி மின்பொறியாளா் அலுவலகம் இடமாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரியாங்குப்பம் காந்தி நகா் பகுதியில் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். அந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக உதவி மின் பொறியாளா் அலுவலகம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. தற்போது தேசிய நெடுஞ்சாலையை கடந்து ஆலாங்குப்பம் கிராமத்தில் அரசு கட்டடத்துக்கு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மின்வாரிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.
இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதிதாக இடமாற்றம் செய்யப்பட உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு செல்ல மிகவும் ஆபத்தான நிலையில் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். வயதானவா்கள், பெண்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். அதனால் இடமாற்றம் செய்யாமல், ஏற்கெனவே இயங்கும் இடத்திலேயே தொடா்ந்து அலுவலகம் இயங்க வேண்டும். இல்லையெனில் காந்திநகா் பகுதியிலேயே அரசு இடத்தில் புதிய கட்டடத்தை கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ஆம்பூா் கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடேசன், மின்வாரிய அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு நடத்தினா். இது குறித்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.