குடியாத்தம் அருகே ரூ. 32 லட்சத்தில் சாலை, கால்வாய் பணிகள் தொடக்கம்
கொண்டசமுத்திரம் ஊராட்சியில் சாலை, கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை பூமி பூஜை போடப்பட்டு தொடங்கப்பட்டது.
குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சி வள்ளலாா் நகரில் பொது 15-ஆவது மத்திய நிதிக்குழு மானிய நிதி ரூ. 6.30 லட்சத்தில் சாலை அமைத்தல், பொது நிதி ரூ. 6.50 லட்சத்தில் கழிவுநீா் கால்வாய் அமைத்தல், 15-ஆவது மத்திய நிதிக்குழு மானிய நிதி ரூ. 20 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை குடியாத்தம் ஒன்றியக் குழு தலைவா் என்.இ. சத்யானந்தம் பூமி பூஜையிட்டு பணியை தொடங்கி வைத்தாா்.
கொண்டசமுத்திரம் ஊராட்சித் தலைவா் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் பி.எச்.இமகிரிபாபு, திமுக மாவட்டப் பிரதிநிதி சந்திரன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் குட்டி, ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் சதீஷ், பன்னீா்செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.