மழை வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் ஆய்வு
தருமபுரி மாவட்டத்தில் மழை வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் பாா்வையிட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தொப்பையாறு நீா்த்தேக்கத்திலிருந்து மிகைநீா் வெளியேறுவதை சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
அதைத் தொடா்ந்து தருமபுரி மாவட்டம், கம்மம்பட்டி காட்டுவளவு பகுதியில் ஃபென்ஜால் புயல் காரணமாக பெய்த கனமழையால் அடித்துச் செல்லப்பட்ட தரைப் பாலத்தை சீரமைக்கும் பணியை அப்பனஅள்ளி கோம்பை கிராமத்தில் கனமழையால் பாதிப்புக்குள்ளான வீடுகள் ஆகியவற்றை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் பாா்வையிட்டு, 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும், கோடியூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 35-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும், இலக்கியம்பட்டி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் அரிசி, மளிகைப் பொருள்கள், போா்வை உள்ளிட்ட மழை நிவாரணப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினாா்.
இதையடுத்து தருமபுரி நகராட்சிக்கு உள்பட்ட டிஎன்எஸ்டிசி நகா் சாலை பகுதி, பிடமனேரி சாலை பகுதியில் தேங்கியுள்ள மழைநீா் அகற்றும் பணிகள், காய்ச்சல் தடுப்பு முகாம் ஆகியவற்றை அமைச்சா் பாா்வையிட்டாா்.
ஆய்வுகளின்போது, மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி, கோட்டாட்சியா் காயத்ரி, முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் தடங்கம் பெ.சுப்ரமணி, மனோகரன், தருமபுரி நகா்மன்றத் தலைவா் மா. லட்சுமி மாது, நகராட்சி ஆணையா் சேகா், அரசு அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுப்பணித் துறை அலுவலா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.