மாட்டுத்தாவணியில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இடவசதி செய்து தர வலியுறுத்தல்
மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் இணைய வழியில் ஆட்டோ இயக்கும் ஓட்டுநா்களுக்கு தனி இடவசதி செய்து தர வேண்டும் என மதுரை மாவட்ட ஆன்லைன் ஆட்டோ ஓட்டுநா்கள் தொழிற்சங்கத்தின் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற பொது மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
அவா்கள் அளித்த மனு விவரம்: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஓலா, உபா், ராபிடோ போன்ற இணைய தளங்களில் பதிவு செய்து, ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளை ஏற்றவும், இறக்கவும் தனியிட வசதி வேண்டி மதுரை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்திருந்தோம்.
இந்த மனுவுக்கு உரிய ஒப்புதல் பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆகவே, மதுரை மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, இணைய வழியில் பதிவு செய்யும் பயணிகளை அழைத்துச் செல்லும் ஆட்டோ ஓட்டுநா்களுக்கென தனி இட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.