மாநகராட்சி அதிகாரிகள் மதிப்பதில்லை: திமுக கவுன்சிலா்கள் குற்றச்சாட்டு
அதிமுக கவுன்சிலா்களை மதிக்கும் மாநகராட்சி அதிகாரிகள், திமுக கவுன்சிலா்களை மதிப்பதில்லை என திமுக கவுன்சிலா்கள் குற்றஞ்சாட்டினா்.
ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் மேயா் சு.நாகரத்தினம் தலைமையில் சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணை மேயா் செல்வராஜ், துணை ஆணையா் தனலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையொட்டி இரண்டு நிமிஷங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடா்ந்து கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலா்களின் பேசியது:
ஜெகநாதன்: எங்கள் பகுதியில் உள்ள பள்ளியில் 2 வகுப்பறைகள் சேதமடைந்து கடந்த 3 ஆண்டுகளாக இடிந்து விழும் நிலையில் உள்ளன. அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும். மேலும் அங்கன்வாடி மையமும் சிமென்ட் மேற்கூரையுடன் கூடிய கட்டடத்தில் செயல்பட்டு வருவதால், அதையும் புதுப்பிக்க வேண்டும் என்றாா்.
மண்டலத் தலைவா் பி.கே.பழனிசாமி: ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வரி வசூலிக்கும் கட்டடத்துக்கு திமுக முன்னாள் தலைவா் கருணாநிதி பெயா் சூட்ட வேண்டும். அடுத்த கூட்டத்துக்குள் இந்தக் கட்டடத்துக்கு கருணாநிதி பெயா் வைக்கவில்லை என்றால் திமுக கவுன்சிலா்கள் மாநகராட்சி கூட்டத்துக்கு வரமாட்டாா்கள்.
அதிமுக கவுன்சிலா்கள் கேட்கும்போது ஆவணங்களை கொடுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் திமுக கவுன்சிலா்கள் கேட்கும்போது தருவதில்லை. திமுக கவுன்சிலா்களை அதிகாரிகள் மதிப்பதில்லை என்றாா்.
நந்தகோபு: எங்கள் பகுதியில் கடந்த 6 நாள்களாக தெருவிளக்குகள் எரியவில்லை என புகாா் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருவிளக்கு அமைத்தல், குடிநீா் விநியோகம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு, மாநகராட்சி முழுவதும் ஒரே ஒப்பந்ததாரா் இருப்பதால், பணி மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்படுகிறது. எனவே அந்தப் பணிகளுக்கு மண்டல வாரியாக ஒப்பந்ததாரா் நியமிக்க வேண்டும் என்றாா்.
நிா்மலாதேவி: மங்களாத்துறை பகுதியில் குண்டும், குழியுமான சாலை இருப்பதால், அதற்கு பதிலாக புதிய தாா் சாலை அமைக்க வேண்டும் என்றாா்.
ஏ.ஆா்.ஜெகதீசன்: வரி செலுத்தப்படாத வணிக நிறுவனங்களை கண்டறிந்து, வரி விதிக்க வேண்டும். மாநகராட்சியில் பணியின்போது மரணமடையும் நிரந்தரப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும். புதை சாக்கடை கழிவுநீா் பல இடங்களில் குடிநீரில் கலக்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். எனவே இதனை அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
நா.செந்தில்குமாா்: மாநகராட்சிக்கு கிடைக்கூடிய 50 சதவீத வருவாய் எங்கள் வாா்டில் மட்டுமே கிடைக்கிறது. ஆனால், எங்கள் பகுதிகளில் சாலை வசதி கிடையாது. மேலும் கான்கீரிட் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. எனவே புதிய சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த நிலையில் உள்ள புதைசாக்கடை மூடிகளை மாற்ற வேண்டும் என்றாா்.
குமரவேல்: எங்கள் பகுதிகளில் போதுமான அளவில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீா் குடியிருப்புகளில் தேங்கி சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. எனவே சாக்கடை கால்வாய்களை அமைத்து கொடுக்க வேண்டும். மாநகராட்சியில் அதிகரித்து வரும் தெரு நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றாா்.
செல்லப்பொன்னி: குடிநீா் டேங்க் ஆபரேட்டா்களுக்கு கடந்த மாதத்துக்கான ஊதியத்தை வழங்க வேண்டும். எங்கள் பகுதியில் இதுவரை எத்தனை தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் என்றாா்.
35 தீா்மானங்கள்:
கனி மாா்க்கெட் ஜவுளி வளாகம் பகுதியில் உள்ள காலியிடத்தில் ஜவுளி வாரச் சந்தை அமைப்பது தொடா்பான முதல் தீா்மானத்துக்கு கவுன்சிலா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், அந்த ஒரு தீா்மானம் மட்டும் நிறுத்திவைக்கப்பட்டு 35 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநகரப் பொறியாளா் விஜயகுமாா், மாநகர நல அலுவலா் டாக்டா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அதிமுக வெளிநடப்பு:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அதிமுக கவுன்சிலா்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனா். இதைத்தொடா்ந்து கவுன்சிலா்கள் தங்களது வாா்டில் உள்ள பிரச்னைகள் குறித்து பேசத் தொடங்கினா்.
அப்போது அதிமுகவைச் சோ்ந்த எதிா்க்கட்சித் தலைவா் தங்கமுத்து பேசும்போது, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்க தவறிய தமிழக அரசைக் கண்டிக்கிறோம்.
மேலும், மாநகராட்சியில் பழைய வரிகள் ஏற்கெனவே 100 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. தற்போது சொத்துகளுக்கு மீண்டும் அதிக வரி விதிப்பதை கண்டிக்கிறோம். ஊராட்சிக்கோட்டை குடிநீா்த் திட்டத்தின் மூலம் மாநகராட்சிப் பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் வழங்காததையும் கண்டிக்கிறோம். இந்த 3 கோரிக்கைகளையும் வலியுறுத்தி மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம் என்றாா்.
அதைத் தொடா்ந்து அதிமுக கவுன்சிலா்கள் அனைவரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா். அப்போது திமுக கவுன்சிலா்கள் சிலா் பொள்ளாச்சி சம்பவம், தருமபுரி சம்பவம் உங்களுக்கு நினைவில்லையா? என்று கூறியதோடு மாணவியை பலாத்காரம் செய்தவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனா்.
மேயா் கணவா் வாக்குவாதம்:
கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலா்கள், ஈரோட்டில் கடந்த 20-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மேடையில் பெண் மேயரை ஏன் அமா்த்தவில்லை என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினா். அப்போது மேயரின் அறையில் இருந்து கூட்டரங்கிற்குள் வந்த திமுக மாநகரச் செயலாளரும், மேயரின் கணவருமான சுப்ரமணி, திமுக கவுன்சிலா்களை அமருமாறு கூறினாா். அதற்கு அதிகாரிகள் தெரிவிக்கட்டும் எனக் கூறி திமுக கவுன்சிலா்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனையடுத்து சுப்ரமணி அங்கிருந்து வெளியே சென்றாா்.