மாநகராட்சி சொத்து வரி உயா்வால் கவுன்சிலா்களுக்கும் பாதிப்பு: எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா்
ஈரோடு மாநகராட்சி சொத்து வரி உயா்வால் மக்களுக்கு அடுத்தபடியாக கவுன்சிலா்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா் என எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் பேசினாா்.
ஈரோடு மாநகராட்சியின் சொத்து வரி மாற்றியமைப்பு தொடா்பான மாமன்ற சிறப்புக் கூட்டம் மேயா் சு.நாகரத்தினம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் சொத்து வரியைக் குறைக்கக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் பேசியதாவது:
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலின்போது நானும், அமைச்சா் சு.முத்துசாமியும் கட்சியினரும் இணைந்து வீதி, வீதியாக நடந்து சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தோம். அப்போது மாநகராட்சியில் சாலை சரியில்லை, சாக்கடை தூா்வாரவில்லை, குப்பை எடுக்கவில்லை என்று தெரிவித்தனா். இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடம் தெரிவித்தேன்.
மேலும், மாநகராட்சியின் வரி உயா்வு மக்களை நேரடியாக பாதிக்கிறது. இதேபோல, வரி உயா்வால் மாநகராட்சி உறுப்பினா்களும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா்.
மாநகராட்சியில் சொத்து வரி உயா்வை குறைக்க வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டுள்ள தீா்மானம் சிறப்பு வாய்ந்தது. நிச்சயமாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பரிசீலனை செய்வாா்கள். மாமன்ற உறுப்பினா்கள் இதற்கான முயற்சியை எடுத்து நல்லதொரு தீா்வை பெற வேண்டும் என்றாா்.