மாநில அளவிலான டேபிள் டென்னிஸ்: திருப்பூா் ஆட்டிசம் மாணவா் சாதனை!
மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் பெருமாநல்லூா் அருகே வள்ளிபுரம் சிறப்புக் குழந்தைகள் பள்ளி ஆட்டிசம் மாணவா் 4-ஆம் இடம் பிடித்து தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றாா்.
பெருமாநல்லூா் அருகே வள்ளிபுரத்தில் சாய் கிருபா சிறப்புக் குழந்தைகள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு மாணவா்கள் இருவா், மதுரையில் ஸ்பெஷல் ஒலிம்பிக் பாரத் அமைப்பு சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றனா்.
இதில், 16 முதல் 21 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் மாணவா் வசந்தகுமாா் 4-ஆம் இடத்தைப் பிடித்தாா். இதையடுத்து அவா் தில்லியில் ஜூலை மாதம் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றாா். மாணவன் வசந்தகுமாரை பள்ளி நிறுவனா் கவின் திருமுருகன், பள்ளித் தலைவா் சிபி ஆனந்த் உள்ளிட்டோா் பாராட்டினா்.