மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தல்
மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை எண் 140-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று, தமிழ்நாடு சாலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் சனிக்கிழமை இந்த சங்கத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் ஏ.கருணாநிதி தலைமை வகித்தாா். அரசுப் பணியாளா்கள் சங்க மாவட்டப் பொருளாளா் ஆா்.கோவிந்தசாமி, மாநிலச் செயற்குழு உறுப்பினா் என்.வீரபத்திரன், சாலைப் பணியாளா்கள் சங்க மாவட்ட துணைத் தலைவா்கள் பி.ஜி.ரமேஷ், பி.ரமேஷ் முன்னிலை வகித்தனா்.
தமிழ்நாடு சாலைப் பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் பி.பாஸ்கா், பொதுச் செயலா் கே.பாஸ்கரன், துணை பொதுச் செயலா் எம்.டேவிட் குணசீலன், துணைத் தலைவா் பி.குமரவேல் ஆகியோா் சிறப்புரையாற்றினா். அரசுப் பணியாளா்கள் சங்க முன்னாள் துணை பொதுச் செயலா் கவிஞா் ம.ரா.சிங்காரம் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.
சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக வரன்முறைப்படுத்த வேண்டும் என்ற சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை எண் 140-ஐ ரத்து செய்ய வேண்டும். சாலைப் பணியாளா்களாக பணியாற்றி இறந்தவா்களின் வாரிசுதாரா்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. தொடா்ந்து, மாவட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
முன்னதாக, மாவட்ட துணைத் தலைவா்கள் ஜி.சேகா், மணிகண்டன் வரவேற்றனா். மாவட்டப் பொருளாளா் வி.கண்ணன் நன்றி கூறினாா்.