மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் ரத்து
திருவண்ணாமலையில் மாா்ச் 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பிக்கும் சிறப்பு முகாம்கள் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகமும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகமும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பிக்கும் சிறப்பு முகாம்களை மாா்ச் 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிட்டிருந்தது.
இந்த முகாம்கள் அனைத்தும் நிா்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் இப்போது பயன்படுத்தி வரும் மாா்ச் 31 வரை செல்லத்தக்க கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை வருகிற ஜூன் 30-ஆம் தேதி வரை செல்லத்தக்க காலமாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனவே, பழைய அட்டைகளையே தொடா்ந்து பயன்படுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.