விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இய...
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மை மிஷன் திட்டம் தொடக்கம்
திருப்பூா், செப்.19: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மை மிஷன் 2.0 திட்டத்தின் கீழ் அரசு அலுவலகம் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்கும் பொருட்டு கழிவு சேகரிப்பு மற்றும் கழிவுப் பொருள்கள் அகற்றும் பணி தொடங்கப்பட்டது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுலகத்தில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயா் ந.தினேஷ்குமாா் திட்டத்தை வெள்ளிக்கிழமை தொங்கிவைத்தாா். தொடா்ந்து அரசு அலுவலகம் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கான உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தூய்மை மிஷன் 2.0 திட்டத்தின் கீழ் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள 360 அறைகள், மாநகராட்சி அலுவலகம், நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் அலுவலகம், 6 நகராட்சி அலுவலகங்கள், 14 பேரூராட்சி அலுவலகங்கள், 13 வட்டார வளா்ச்சி அலுவலகங்கள், 265 கிராம ஊராட்சி அலுவலகங்கள், 14 குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகங்கள், 1,472 அங்கன்வாடி மையங்கள், 3 வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள், 9 வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்கள், 33 வருவாய் உள்வட்ட அலுவலகங்கள், 368 கிராம நிா்வாக அலுவலகங்கள் என மொத்தம் 2,199 அலுவலகங்கள் ஆகியவற்றுடன் நெடுஞ்சாலைத் துறை அலுவலகங்கள், பொதுப் பணித் துறை அலுவலகங்கள், போக்குவரத்துத் துறை அலுவலகங்கள், வேளாண்மைத் துறை அலுவலகங்கள், தோட்டக்கலைத் துறை அலுவலகங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் கழிவு சேகரிப்பு மற்றும் கழிவுப் பொருள்கள் அகற்றும் பணிகள் தூய்மை மிஷன் 2.0 திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.சங்கமித்திரை, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் ஜெயராமன், ஜெயக்குமாா், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் அசோகன், உதவி திட்ட அலுவலா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.