மின் தடைகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்! - கள்ளக்குறிச்சி ஆட்சியா் உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின் தடைகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவிட்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மின் வாரியத்தின் பல்வேறு திட்டப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அந்த வகையில், கடலூா் மாவட்டம், இலங்கையனூா் கிராமத்தில் 30 ஏக்கா் பரப்பளவில் செயல்பட்டு வரும் தனியாா் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தை பாா்வையிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு இந்த மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வழங்கப்பட்டு வரும் 9 மெகா வாட் மின் விநியோகம் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, ஆசனூா் சிட்கோ தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் 110/33/11 கி.வோ. துணை மின் நிலையம், உளுந்தூா்பேட்டை வட்டம், செங்குறிச்சி சுங்கச்சாவடி அருகில் அமைக்கப்பட்டுள்ள மின்சார வாகனங்களுக்கு பேட்டரி சாா்ஜ் செய்யும் மையம் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா், செங்குறிச்சி சுங்கச்சாவடி, பெரியாா் நகரில் உள்ள தனிநபா் இல்லத்தில் பிரதம மந்திரி சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டத்தின் கீழ் 9 கிலோ வாட் திறன் கொண்டு அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மேற்கூரை மின் உற்பத்தி மையம், தியாகதுருகம் மின் வாரிய மத்திய பண்டக சாலை ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயற்கை சீற்றங்களால் மின் விநியோகம் தடைபடுவதை உடனுக்குடன் சரி செய்து, பொதுமக்களுக்கு சீரான மின்விநியோகம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென மின் வாரிய அதிகாரிகளுக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, மின் வாரிய உயா் அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.