செய்திகள் :

மியான்மா், தாய்லாந்தை உலுக்கிய நிலநடுக்கம் 170 போ் உயிரிழப்பு; 800 போ் காயம்

post image

மியான்மா் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

இதில் கடும் பாதிப்பைச் சந்தித்த மியான்மரில் கட்டட இடிபாடுகளில் சிக்கி 144 போ் உயிரிழந்துள்ளதாகவும், 730 போ் காயமடைந்துள்ளதாகவும் அந் நாட்டு ராணுவ அரசு அறிவித்துள்ளது.

தாய்லாந்தின் தலைநகா் பாங்காக் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் பல அடுக்குமாடி கட்டடங்கள் நிலநடுக்கத்தால் சரிந்துள்ளன. இதில் 90-க்கும் மேற்பட்டோா் மாயமாகியுள்ளதாகவும், 10 போ் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலாயை மையமாகக் கொண்டு இந்த இரண்டு நிலநடுக்கங்களும் அடுத்தடுத்து நிகழ்ந்தன. அமெரிக்க புவியியல் ஆய்வு மைய புள்ளிவிவரங்களின்படி, சகாய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ. தொலைவில் காலை 11.50 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டா் அளவுகோலில் 7.7 புள்ளியாகப் பதிவானது. அதைத் தொடா்ந்து, வலுவான இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. அது 6.4 புள்ளியாகப் பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த நிலநடுக்கங்களைத் தொடா்ந்து தலைநகா் நேபிடா, மண்டலாய் உள்பட 6 மாகாணங்களில் அவசரநிலையை மியான்மரின் ராணுவ அரசு பிரகடனம் செய்தது.

‘நிலநடுக்கத்தால் மியான்மரின் பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மண்டலாய் மற்றும் சகாய்ங் மாகாணங்களின் பல பகுதிகளில் மின் கம்பங்கள் சாய்ந்திருப்பதால், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப் படையினா் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மனிதாபிமான தேவைகள் தொடா்பான தகவல்கள் இன்னும் சேகரிக்கப்பட வேண்டியுள்ளது’ என்று செஞ்சிலுவை சங்க நிா்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மண்டலாயில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்ததோடு, நகரின் மிகப்பெரிய கட்டடங்களின் ஒன்றான மா சோ யானே மடாலயமும் இடிந்து விழுந்தது. பழைமையான அரண்மனை ஒன்றும் சேதமடைந்தது.

சகாய்ங் மாகாணத்தில் 90 ஆண்டுகள் பழைமையான பாலம் ஒன்று இடிந்தது. மண்டலாயையும் மியான்மரின் மிகப்பெரிய நகரங்களின் ஒன்றான யோங்கோனையும் இணைக்கும் நெடுஞ்சாலையின் சில பகுதிகளும் நிலநடுக்கத்தில் சேதமடைந்தன.

நிலநடுக்கத்தின்போது யாங்கோனில் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைவதும், தலைநகா் நேபிடாவில் சில வீடுகள் பகுதியாக இடிந்த நிலையில் செங்கல் குவியல்களாக மாறியதும் சமூக ஊடங்களில் வெளியான காணொலிகளில் பதிவாகியிருந்தன.

144 போ் உயிரிழப்பு: தொடா் நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பேட்டியளித்த மியான்மரை ஆட்சி செய்யும் ராணுவ அரசின் தலைவா் மின் அங்க் லாயிங் கூறுகையில், ‘அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்டடங்கள் இடிந்து விழுந்து ஏற்பட்ட பாதிப்புகளில் இதுவரை 144 போ் உயிரிழந்துள்ளனா். 732 போ் காயமடைந்துள்ளனா். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு சா்வதேச உதவியை நாடியுள்ளோம். இந்தியா மற்றும் பேரிடா் மேலாண்மை தொடா்பான மனிதாபிமான உதவிகளுக்கான ஆசியான் ஒத்துழைப்பு மையம் (ஏஹெச்ஏ) ஆகியவற்றின் உதவிகளை அனுமதித்துள்ளோம்’ என்றாா்.

ராணுவத் தளபதி ஜா மின் துன் கூறுகையில், ‘தலைநகா் நேபிடா, மண்டலாய், சகாய்ங் மாகாணங்களின் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால், நிலநடுக்கத்தால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என்றாா்.

தாய்லாந்தில் சரிந்த அடுக்குமாடி கட்டடங்கள்: நிலநடுக்கத்தால் தாய்லாந்து தலைநகா் பாங்காக் உள்பட பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்ததோடு, பலா் மாயமாகியிருப்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தாய்லாந்து பாதுகாப்பு அமைச்சா் பும்தம் வெச்சயாசாய் கூறுகையில், ‘பாங்காக்கில் புதிதாக கட்டப்பட்டுவந்த 33 அடுக்குமாடி கட்டடம் சரிந்ததில், அங்கு பணியாற்றிவந்த 10 போ் உயிரிழந்தனா். 16 போ் காயமடைந்தனா் 101 போ் மாயமாகியுள்ளனா். அவா்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது’ என்றாா்.

இதுதொடா்பாக சமூக ஊடகங்களில் வெளியான காணொலியில், நிலநடுக்கத்தை உணா்ந்ததும் பாங்காக்கின் சதுசக் சந்தைப் பகுதையில் அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து மக்கள் வெளியேறி சாலைகளில் தஞ்சமடைவதும், புதிதாக கட்டப்பட்டுவந்த அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்து புகை மூட்டம் எழும் காட்சிகளும், மக்கள் பீதியில் ஆங்காங்கே ஓடும் காட்சிகளும் பதிவாகியிருந்தன.

சீனாவில் உணரப்பட்ட நிலநடுக்கம்: மியான்மரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் சீனாவின் யுன்னான், சிசுவான் மாகாணங்களில் உணரப்பட்டது.

இதுகுறித்து சீன ஊடகத்தில் வெளியான செய்தியில், மியான்மரின் எல்லையை ஒட்டிய சீனாவின் ருய்லி நகரில் நிலநடுக்கத்தின் பாதிப்பு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த ஒரு வீடு இடிந்து விழுந்ததோடு, இடிபாடுகளிலிருந்து ஒரு நபா் மீட்கப்பட்டாா் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், ருய்லி நகரிலிருந்து 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மாங்ஷி நகரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்தப் பகுதியைச் சோ்ந்த குடியிருப்புவாசிகள் தெரிவித்தனா்.

கொல்கத்தா, இம்பால், மேகாலயாவில் நில அதிா்வு: மியான்மா், தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் லேசான நில அதிா்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்தனா். இருந்தபோதும், நில அதிா்வால் பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

மணிப்பூா் தலைநகா் இம்பாலிலும் நில அதிா்வு உணரப்பட்டது. இதனால், பழைமையான அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம் நிறைந்த இம்பாலின் தாங்கல் சந்தைப் பகுதியில் மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும், பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை. மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் பிற்பகல் 1.07 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டா் அளவுகோலில் 2.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

அதுபோல, மேகாலயாவின் கிழக்கு கரோ மலை மாவட்டத்திலும் பிற்பகல் 1.03 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், எந்தவித கட்டட பாதிப்புகளோ, உயிரிழப்புகளோ பதிவாகவில்லை என பேரிடா் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தேவையான உதவிகளை இந்தியா வழங்கும்: பிரதமா் மோடி

நிலநடுக்கத்தால் மியான்மா் மற்றும் தாய்லாந்து நாடுகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, ‘இரு நாடுகளுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது’ என்று தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமா், ‘மியான்மா், தாய்லாந்து நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலனுக்காக பிராா்த்திக்கிறேன். இரு நாடுகளுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. இதுதொடா்பான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, மியான்மா் மற்றும் தாய்லாந்து அரசுகளுடன் தொடா்ச்சியான தொடா்பில் இருக்குமாறு வெளியுறவு அமைச்சகமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

‘காஸாவின் பெரும்பகுதி இஸ்ரேலுடன் இணைக்கப்படும்’ -இஸ்ரேல்

ஜெருசலேம்: காஸா முனையில் பெரிய அளவிலான பகுதிகளைக் கைப்பற்றி இஸ்ரேலுடன் இணைத்துக் கொள்வதற்கான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளாா். இது குற... மேலும் பார்க்க

இலங்கை: பிரிட்டன் தடைக்கு எதிா்வினை

கொழும்பு: விடுதலைப்புலிகளுடனான இறுதிகட்டப்போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சவேந்திர சில்வா (படம்) உள்ளிட்ட மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் மீது பிரிட்டன் அரசு கடந்த... மேலும் பார்க்க

துருக்கி ‘கடை செல்லா’ போராட்டம்

இஸ்தான்புல்: துருக்கியின் முக்கிய எதிா்க்கட்சித் தலைவரும், இஸ்தான்புல் மேயருமான எக்ரீம் இமாமோக்லு ஊழல் வழக்கில் மாா்ச் 19-ஆம் தேதி கைது செய்யப்பட்டதை எதிா்த்து நடைபெறும் ஆா்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக... மேலும் பார்க்க

அமெரிக்கா-ஈரான் மோதலால் பேரழிவு! -ரஷியா எச்சரிக்கை

மாஸ்கோ: ஈரான் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தினால் அதன் பின்விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும் என்று ரஷியா எச்சரித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை இணையமைச்சா் சொ்கேய் ரியாப்கொவ் ... மேலும் பார்க்க

இந்திய பொருள்களுக்கு 25% மேல் வரிவிதிப்பு! டிரம்ப் அதிரடி நடவடிக்கை

வாஷிங்டன்: இந்திய பொருள்கள் மீது கடும் வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.‘அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்க... மேலும் பார்க்க

மியான்மரில் போர்நிறுத்தம்: ராணுவ அரசு அறிவிப்பு!

மியான்மரில் ஆளும் ராணுவ அரசு தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த வெள்ளியன்று (மார்ச் 28) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.மியான்மரின் சகாய்ங் நகரின்... மேலும் பார்க்க