மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மகா. அமைச்சர்; முதல் மனைவியை மறைத்த விவகாரத்தில் நீதிமன்றம் நோட்டீஸ்
மகாராஷ்டிரா சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருப்பவர் தனஞ்சே முண்டே. இவர் துணை முதல்வர் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். கடந்த சில மாதங்களாகத் தனஞ்சே முண்டே தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
சமீபத்தில் பீட் மாவட்டத்தில் பஞ்சாயத்துத் தலைவர் சந்தோஷ் தேஷ்முக் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தனஞ்சே முண்டேயின் தீவிர ஆதரவாளர் வால்மிக் கராட் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தனஞ்சே முண்டேயை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் அஜித்பவார் அக்கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/wce27hmy/lgdfi2tdhananjay-munde-625x30008January25.webp)
தனஞ்சே முண்டேயிக்கு இரண்டு மனைவியாகும். முதல் மனைவி கருணா முண்டே அவரை விட்டுப் பிரிந்து குழந்தையோடு தனித்து வாழ்கிறார். தனஞ்சே முண்டே மீது குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏற்கனவே புகார் செய்திருக்கிறார். சமீபத்தில் கருணா முண்டே மும்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குடும்ப வன்முறை தொடர்பான மனுவை விசாரித்த குடும்ப நீதிமன்றம் தனஞ்சே முண்டே மாதம் 2 லட்சம் ரூபாய் கருணா முண்டேயிக்கு வழங்க உத்தரவிட்டு இருந்தது.
இது நடந்து சில நாட்களே ஆன நிலையில் கருணா முண்டே மூலம் தனஞ்சே முண்டேயிக்கு மேலும் ஒரு சிக்கல் வந்திருக்கிறது. தனஞ்சே முண்டே தனது தேர்தல் விண்ணப்பத்தில் தனது மனைவி ராஜ்ஸ்ரீ என்றும், தனக்கு 3 குழந்தைகள் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். முதல் மனைவி குறித்தோ அல்லது அவரது சொத்து குறித்தோ எதுவும் தெரிவிக்காமல் மறைத்துவிட்டார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/zlibaekc/9f9l97kokaruna-munde-625x30006February25.jpg)
இது தொடர்பாகக் கருணா முண்டே தனது வழக்கறிஞர் சந்திரகாந்த் மூலம் ஆன்லைனில் புகார் செய்துள்ளார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 33 (A) (I) மற்றும் 125A ஆகிய பிரிவுகளின் கீழ் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மட்டுமல்லாது நேரடியாகவும் கருணா முண்டே பார்லி நீதிமன்றத்தில் புகாரைத் தாக்கல் செய்துள்ளார். அதனை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இதையடுத்து தனஞ்சே முண்டேயிக்கு சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கு விசாரணை இம்மாதம் 24ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தனஞ்சே முண்டேயிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play