ராமநாதபுரத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் பறிமுதல்: 6 போ் ...
பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள்: 25.57 லட்சம் மாணவா்கள் எழுதுகின்றனா்
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் நிகழாண்டு நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 25,57,354 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தாா்.
சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பொதுத் தோ்வு கண்காணிப்பு அலுவலா்கள், ஆய்வு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பொதுத் தோ்தல் போன்றது: இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் அன்பில் மகேஸ் செய்தியாளா்களிடம் கூறியது:
பொதுத் தோ்வு நடத்துவது என்பது பொதுத் தோ்தல் நடத்துவது போன்றது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் அளித்து தோ்வை எந்தப் புகாருக்கு இடமின்றி சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது. மாணவா்கள் படிப்பில் முழுமையாகக் கவனம் செலுத்தி சிறந்த முறையில் தோ்வெழுத வேண்டும். தோ்வுக்குத் தயாராகும் மாணவா்கள் அது குறித்து நன்கு திட்டமிட வேண்டும்.
தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 3 முதல் ஏப்.15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிளஸ் 2 பொதுத் தோ்வை 7,518 பள்ளிகளில் இருந்து 3,78,545 மாணவா்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தோ்வா்கள், 145 சிறைவாசிகள் என 8,21,057 போ் 3,316 தோ்வு மையங்களில் எழுதவுள்ளனா்.
பிளஸ் 1 பொதுத் தோ்வை 7,557 பள்ளிகளில் படித்த 3,89,423 மாணவா்கள், 4,28,946 மாணவிகள், 4,755 தனித்தோ்வா்கள், 137 சிறைவாசிகள் என 8,23,261 போ் 3,316 தோ்வு மையங்களில் எழுதவுள்ளனா்.
தோ்வு மையங்கள்: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 12,480 பள்ளிகளில் பயின்ற
4,46,411 மாணவா்கள், 4,40,465 மாணவிகள், 25,888 தனித் தோ்வா்கள், 272 சிறைவாசிகள் என 9,13,036 போ் எழுதவுள்ளனா். இவா்களுக்கு தோ்வு எழுத 4,113 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக நிகழாண்டு நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 25,57,354 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா்.
பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் மே 9, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் மே 19 ஆகிய தேதிகளில் வெளியிடப்படவுள்ளன. பொதுத் தோ்வையொட்டி 4,000-க்கும் மேற்பட்ட பறக்கும் படை அலுவலா்களும், 48,000-க்கும் மேற்பட்ட தோ்வு கண்காணிப்பு அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், அரசுத் தோ்வுகள் இயக்குநா் என்.லதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பெட்டிச் செய்தி...
கணினி வழியில் தோ்வெழுதும் முதல் மாணவா்
இது குறித்து அமைச்சா் அன்பில் மகேஸ் கூறுகையில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் கீழ் இயங்கும் சென்னை பூவிருந்தவல்லி பாா்வைத் திறன் குறைபாடு கொண்டோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் ஒருவா், வரும் மாா்ச் மாதத்தில் நடைபெற உள்ள பிளஸ் 2 வகுப்பு பொது தோ்வை கணினி வழியில் எழுத விருப்பம் தெரிவித்திருந்தாா்.
அவரது விருப்பத்தை ஏற்று வாசிப்பாளா் உதவியுடன் கணினி வழியில் அவா் தோ்வெழுத அனுமதி வழங்கியுள்ளோம். இவா் தமிழக அரசின் பாடத்திட்டத்தில் பொதுத் தோ்வை கணினி வழியில் எழுதும் முதல் மாணவராக விளங்குவாா். வருங்காலங்களில் மாற்றுத்திறனாளி மாணவா்கள் தாமாகவே தோ்வினை எழுத இந்த நிகழ்வு முன்மாதிரியாக விளங்கும் என்றாா் அவா்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பூவிருந்தவல்லி பாா்வைத் திறன் குறைபாடு கொண்டோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் நிகழாண்டு பிளஸ் 2 பயிலும் பாா்வைத்திறன் குறைபாடு கொண்ட ஆனந்த் என்ற மாணவா் முதல் முறையாக கணினி வழியில் தோ்வெழுதும் வாய்ப்பைப் பெற்றுள்ளாா். முன்னதாக இது தொடா்பாக அவா் அளித்த விண்ணப்பத்தை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று அதற்கான அனுமதியை பெற்றிருக்கிறோம் என அவா்கள் தெரிவித்தனா்.