உச்சநீதிமன்ற நீதிபதி கே.வினோத் சந்திரன்- கொலீஜியம் பரிந்துரை
மீனாட்சி மிஷன் மருத்துவமனை நடத்திய மருத்துவ நச்சுயியல் மீது இந்தியாவின் முதல் சர்வதேச கருத்தரங்கு!
இன்டாக்ஸ் 2024 (INTOX 2024) என்ற பெயரில் மருத்துவ நச்சுயியல் மீது இந்தியாவில் முதன் முதலாக நடத்தப்படும் சர்வதேச கருத்தரங்கு நிகழ்வு மதுரை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் டிசம்பர் 8 ஆம் தேதி (MMHRC) நடைபெற்றது.
2024 டிசம்பர் 6 முதல் 8-ம் தேதி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் US, UK, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா உட்பட 22 நாடுகளிலிருந்து 50 மருத்துவ நிபுணர்களும், 500 பிரதிநிதிகளும் பங்கேற்றனர். ரீடிங் பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவ நச்சுயியலுக்கான இந்தியச் சங்கத்தின் ஒத்துழைப்போடு இந்த மூன்று நாள் கருத்தரங்கை MMHRC சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியிருக்கிறது. நச்சுப்பொருட்கள், நச்சுகள் மற்றும் உயிரினங்களால் (விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள்) உருவாக்கப்படுகிற நஞ்சு மற்றும் நச்சுயியல் துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து மருத்துவ சமூகத்தினர் நன்கு அறிந்திருக்குமாறு தெளிவான விளக்கங்களை வழங்குவதே இக்கருத்தரங்கின் குறிக்கோளாகும். அத்துடன் வேதிப்பொருட்கள், மருந்துகள் மற்றும் நச்சுகளால் ஏற்படுகிற நோய்கள் மீதான ஆய்வு மற்றும் அவைகள் வராமல் தடுப்பது மற்றும் அதற்கான சிகிச்சை ஆகியவை குறித்து விவாதிப்பதும், ஆராய்வதும் இதன் நோக்கமாகும்.
INTOX 2024 நிகழ்வில் இது தொடர்பான ஆராய்ச்சி விவாதங்கள் இடம் பெற்றன. மேலும், நடைமுறை சாத்தியமுள்ள, நிஜ உலக செயல்பாடுகள் மற்றும் தீர்வுகள் குறித்தும் இக்கருத்தரங்கு சிறப்பு கவனம் செலுத்தியது. குறிப்பாக கிராமப்புறங்களிலும் மற்றும் அதிக இடர்வாய்ப்புள்ள பகுதிகளிலும் நச்சு பாதிப்புள்ள நபர்களுக்கு வழங்கப்படும் அவசரநிலை சிகிச்சையை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு பங்கேற்பாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அமர்வுகளும் இதில் நடத்தப்பட்டன. மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 2024 டிசம்பர் 7-ம் தேதியன்று உலக சுகாதார நிறுவனத்தின் இந்தியக் கிளையின் ஒத்துழைப்போடு நோய் கட்டுப்பாட்டிற்கான தேசிய மையத்தால் (NCDC) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, ‘வேதிப்பொருள் அவசரநிலைகளின் பொது சுகாதார மேலாண்மை’ என்ற தலைப்பு மீதான பயிலரங்கு இக்கருத்தரங்கு நிகழ்வின் தனிச்சிறப்பான நிகழ்வுகளுள் ஒன்றாக இருந்தது. வேதிப்பொருட்களின் காரணமாக உருவாகும் அவசரநிலைகளை சிறப்பாக எதிர்கொள்ள மருத்துவர்கள், அவசரநிலை சிகிச்சை வழங்குநர்கள் மற்றும் தொடர்புடைய பிற நபர்களுக்கு இப்பயிலரங்கு சிறப்பான பயிற்சியளித்தது.
நோய் கட்டுப்பாட்டிற்கான தேசிய மையத்தின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்ககத்தின் இயக்குநர் புரொஃபசர் (டாக்டர்) அதுல் கோயல், NCDC-ன் முதன்மை ஆலோசகர் டாக்டர். அனில் குமார், மற்றும் NCDC-ன் உயிரி வேதியியல் மற்றும் நச்சுயியல் பிரிவின் பொது சுகாதார தயார் நிலை மற்றும் தொற்றா நோய்கள் துறைக்கான இணை இயக்குநர் டாக்டர். மீரா துரியா, உலகச் சுகாதார நிறுவனத்தின் NPO (அவசர நிலைக்கு தயார் நிலை மற்றும் இடர் மேலாண்மை) டாக்டர். சவுரப் தலால், பேராசிரியர். சக்தி வையாபுரி, இருதய மற்றும் விஷ மருந்தியல் பேராசிரியர், ரீடிங் பல்கலைக்கழகம், இங்கிலாந்து, எம்எம்ஹெச்ஆர்சி-ன் மருத்துவ இயக்குநர் டாக்டர். ரமேஷ் அர்த்தநாரி, இம்மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசரநிலை சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர். நரேந்திர நாத் ஜெனா மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ நிர்வாகி டாக்டர். B. கண்ணன் ஆகியோர் இக்கருத்தரங்கு நிகழ்வில் சிறப்புரை ஆற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர்.S. குருசங்கர்,INTOX 2024 குறித்து பேசுகையில், “நச்சுகள் பெரிய எண்ணிக்கையிலான மனித உயிர்களை பறிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மட்டும் பாம்புக்கடி போன்ற நச்சு தொடர்பான நேர்வுகளுக்கு உரிய நேரத்தில் மருந்தும், அறிவியல் ரீதியிலான சிகிச்சையும் கிடைக்காத காரணத்தால் 50,000 முதல் 70,000 நபர்கள் வரை உயிரிழக்கின்றனர். உலகளவில் பாம்புக்கடியால் ஏற்படும் இழப்புகளுள் ஏறக்குறைய 50 சதவிகிதம் நம் நாட்டில் நிகழ்கிறது. எனவே தான் உலகின் பாம்புக்கடிக்கான தலைநகரமாக நம் நாடு கருதப்படுகிறது. இந்த மிகப்பெரிய உயிரிழப்பு விகிதத்தைக் கருத்தில் கொண்டுதான் பாம்புக்கடியை‘ அறிவிக்கத்தகு நோய் ’ (Notifiable Disease) என்று மிக சமீபத்தில்தான் இந்திய அரசு அறிவித்திருந்தது. இத்தகைய பின்புல சூழலில் நடைபெறும். INTOX 2024 கருத்தரங்கானது அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவில் முதன் முறையாக ஏற்பாடு செய்து நடத்தப்படும் இந்நிகழ்வானது, நச்சுயியல் ஆராய்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான உலகளாவிய முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். முன்னணி அறிவியலாளர்கள், மருத்துவ நிபுணர்கள், கொள்கை உருவாக்குநர்கள் மற்றும் மருத்துவ தொழில்துறையின் முன்னோடிகள் என பலதரப்பினரும் ஒருங்கிணைந்து இதில் பங்கேற்று மதிப்புமிக்க தகவலையும், அறிவையும் பகிர்ந்து கொள்கின்றனர்; புரட்சிகரமான மேம்பட்ட தீர்வுகளை கண்டறிய ஒத்துழைப்பை மேற்கொள்கின்றனர்” என்று குறிப்பிட்டார்.
ஆபத்தான நச்சுக்களை உயிர்காக்கும் புத்தாக்க தீர்வுகளாக மாற்றும் மிகப்பெரிய சாத்தியத்திறன் கொண்டதாக நச்சுயியல் திகழ்கிறது என்று குறிப்பிட்ட டாக்டர். நரேந்திர நாத் ஜெனா, “பெரும்பாலும் மிகவும் ஆபத்தானவையாக பார்க்கப்படுகிற உயிரினங்கள் வெளியிடும் நஞ்சு, விஷயம் மற்றும் நச்சுப்பொருட்கள் எப்படி உயிர்காக்கும் சிகிச்சைகள், மருந்துகள் மற்றும் உயிரி தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு இட்டுச்செல்லக்கூடும் என்பது குறித்து இக்கருத்தரங்கு முழுவதிலும் விவாதங்கள் நடைபெற்றன.
நச்சுகளின் மருத்துவ பண்பியல்புகள் மீது தங்களது ஆராய்ச்சி குறித்து அறிவியலாளர்களும், நிபுணர்களும் தரவுகளையும், கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர். எடுத்துக்காட்டாக, பாம்பின் விஷத்தை, இதய நோய், புற்றுநோய் மற்றும் இரத்தம் உரைதல் சீர்கேடு போன்ற பாதிப்புகளுக்கு புதுமையான சிகிச்சை தீர்வுகளை உருவாக்க எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்த பகிர்வுகள் இடம்பெற்றன. இதுவரை எட்டப்பட்டிருக்கிற முன்னேற்றத்தை இக்கருத்தரங்கு நிகழ்வு பெருமிதத்துடன் கொண்டாடியது மட்டுமன்றி, உலகளவில் சுகாதார பராமரிப்பில் நிலைமாற்றத்தைக் கொண்டுவரும் திறன்கொண்ட நச்சுயியலின் சிறப்பான எதிர்காலம் குறித்தும் சுட்டிக்காட்டியது,” என்று எடுத்துரைத்தார்.
உலகெங்கிலும் உள்ள பல பிராந்தியங்கள், நச்சுக்கடிக்கு, குறிப்பாக பாம்புகளிடமிருந்து பாதிப்புக்கு ஆளாகுபவையாக இருப்பதால் மருத்துவ சிகிச்சை வழங்குனர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் வழங்கப்பட வேண்டிய கல்வி மற்றும் பயிற்சியின் முக்கியத்துவத்தை INTOX 2024 முன்னிலைப்படுத்தியது. உள்ளூர் அளவில் விரைவான பதில்வினையாற்றும் திறனை மேம்படுத்துவது, கணிசமான அளவிற்கு உயிரிழப்புகளை குறைக்கும் மற்றும் அவசரநிலை சூழ்நிலைகளில் சிகிச்சை விளைவுகளை மேம்படுத்தும் என்பதும் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. பாம்பு கடிக்கான சிகிச்சை மேலாண்மையை தேசிய சுகாதார செயல் உத்திகளோடு ஒருங்கிணைப்பதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது. சத்தமில்லாமல் மௌனமாக நிகழ்கிற ஒரு பேரழிவு நிகழ்வாக கருதப்படுகிற இது குறித்து அரசும், மருத்துவ துறை சார்ந்த நிறுவனங்களும் ஒருங்கிணைந்து நடவடிக்கையில் இறங்குவதற்கான அறைகூவலும் இதில் விடுக்கப்பட்டது.
வேதிப்பொருள் அவசரநிலைகளின் பொது சுகாதார மேலாண்மை மீதான உணர்வூட்டல் பயிலரங்கு, வேதிப்பொருட்களினால் ஏற்படும் பேராபத்துகளின் மேலாண்மை மற்றும் அதன் பாதிப்புகளை தணிப்பது குறித்து முக்கிய தகவல்களை வழங்கியது. இதன் மூலம் இத்தகைய நெருக்கடி நிலைகளுக்கு விரைவாகவும், திறம்படவும் பதில் வினையாற்ற அவசியப்படும் திறன்களை பங்கேற்பாளர்கள் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் பல பகுதிகளில் அவசர கவனம் பெற வேண்டிய ஒரு பிரச்சனையாக இருந்து வரும் வேதிப்பொருள்/இரசாயன அவசரநிலைகளின் பாதிப்பை குறைப்பதில் ஒத்துழைப்பு மற்றும் அதிவேக பதில்வினையாற்றலின் முக்கியத்துவத்தையும் இந்த அமர்வு வலுவாக எடுத்துரைத்தது.