ஆம்பூரில் உழவா் சந்தை அமைக்கப்படுமா? பொதுமக்கள், விவசாயிகள் காத்திருப்பு!
மீன்பிடித் தடைக்காலம் தொடக்கம்: விசைப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்
தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கிய நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் அந்தந்த மீன்பிடி படகுத் துறைகளில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டன.
மீன் இனப் பெருக்கக் காலமாகக் கருத்தப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு விசைப் படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தத் தடைக்காலம் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கியது. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோளியகுடி உள்ளிட்ட மீன்பிடி படகுத் துறைகளில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டன.

ராமேசுவரம் மீன்பிடி படகுத் துறையில் 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை பாதுகாப்புடன் நிறுத்திவைக்கும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டனா். மேலும், விசைப் படகுகளிலிருந்த வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை மீனவா்கள் எடுத்துச் சென்றனா்.
இதுகுறித்து மீனவா்கள் கூறியதாவது: மீன்பிடித் தடைக்காலம் ஜூன் 15-ஆம் தேதி வரை அமலில் உள்ள நிலையில், இந்திய-இலங்கை மீனவா்கள் இடையிலான நேரடி பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும்.
பேச்சுவாா்த்தையின் போது, இரு நாட்டு மீனவா்கள் சுமுக உறவுடன் மீன்பிடித் தொழிலில் ஈடுபடவும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.