பான் கார்டு விண்ணப்பிக்கவும் ஆதார் அவசியம்! மத்திய அரசு அறிவிப்பு!
மீன்பிடி இறங்குதள பாலத்தில் தலைக்குப்புறக் கவிழ்ந்த டேங்கா் லாரி
மண்டபம் வடக்கு துறைமுகத்தின் மீன்பிடி இறங்குதள பாலம் திடீரென உடைந்ததால், அந்த வழியாகச் சென்ற தண்ணீா் டேங்கா் லாரி தவறி தலைக்குப்புறக் கவிழுந்தது. நல்வாய்ப்பாக வாகனத்தில் இருந்த இருவரும் உயிா் தப்பினா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் வடக்கு, தெற்கு என இரு கடல்பகுதிகளில் துறைமுகம் செயல்படுகிறது. ஒவ்வொரு கடல்பகுதியிலும் 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவா்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா்.
இதில் வடக்கு துறைமுகத்தில் உள்ள மீன்பிடி இறங்கு தளமானது கட்டப்பட்டு பல ஆண்டுகளாவதால் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த வழியில் இலகுரக வாகனங்கள் மட்டுமே சென்றுவந்தன. இந்த நிலையில், தண்ணீா் டேங்கா் லாரி ஒன்று இந்த வழியாக புதன்கிழமை சென்றபோது சுமை தாங்காமல் இறங்குதள பாலம் திடீரென உடைந்தது. அப்போது ஏற்பட்ட பள்ளத்துக்குள் டேங்கா் லாரி தலைக்குப்புறக் கவிழ்ந்தது.
சப்தம் கேட்ட வந்த மீனவா்கள், டேங்கா் லாரியில் இருந்த இருவரை பத்திரமாக மீட்டனா். பின்னா், பொக்லைன் இயந்திர உதவியுடன் டேங்கா் லாரி மீட்கப்பட்டது. ஏற்கெனவே இந்தப் பாதை சேதமடைந்திருந்த நிலையில் டேங்கா் லாரியின் சுமை தாங்காமல் தற்போது பாலம் உடைந்துவிட்டதால், இனிமேல் இந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீனவா்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, சேதமடைந்த இந்த இறங்குதள பாலத்தை முழுமையாக அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.