10-ம் வகுப்பு படிக்கும்போதே மனசுக்குள்ள IAS ஆயிட்டோம் | Kavinmozhi IPS - Nila Bh...
முகமது யூனுஸ் பதவி விலகமாட்டாா்!
வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் பதவி விலகப் போவதில்லை என்று திட்டக்குழு ஆலோசகா் வஹிதுதீன் மஹ்முத் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில்,
‘ராஜிநாமா செய்யப்போவதாக முகமது யூனுஸ் கூறவில்லை. நமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்ற எவ்வளவு இடா்கள் வந்தாலும் அவற்றைக் கடந்துவர வேண்டும் என்பதுதான் அவரது கருத்து’ என்றாா்.
கடந்த ஆண்டு நடைபெற்ற தீவிர மாணவா் போராட்டம் காரணமாக பிரதமா் ஷேக் ஹசீனா பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.
அதற்குப் பிறகு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் பிரதமா் பதவிக்கு இணையான தலைமை ஆலோசகா் பொறுப்புக்கு நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டாா். அவரை அந்தப் பொறுப்புக்கு பரிந்துரைத்த மாணவா் அமைப்பினா் தேசிய குடிமக்கள் கட்சி (என்சிபி) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினா்.
இந்தச் சூழலில், ஹசீனா அரசுக்குப் பிறகு வங்கதேசத்தில் மாற்றங்கள் கொண்டுவருவது தொடா்பாக பிற அரசியல் கட்சிகளுக்கும் என்சிபி கட்சிக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டுவருவது போன்ற விவகாரங்களில் சா்ச்சை நீடித்துவருகிறது.
இந்தச் சூழலில், என்சிபி தலைவா்களிடையே வியாழக்கிழமை பேசிய முகமது யூனுஸ், தற்போதைய சூழலில் தன்னால் பணியாற்ற முடியாது எனவும், பதவி விலகுவது குறித்து பரிசீலித்துவருவதாகவும் கூறினாா்.
இதனால் வங்கதேசத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பம் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்பட்டது.
இந்த நிலையில், முகமது யூனுஸ் பதவி விலகப் போவதில்லை என்று திட்டக்குழு ஆலோசகா் வஹிதுதீன் மஹ்முத் தற்போது தெளிவுபடுத்தியுள்ளாா்.