புதுச்சேரியில் ஜன.12 முதல் தலைக்கவசம் கட்டாயம்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்
முதலிரவில் ஆண்களுக்கு இப்படியும் சிக்கல் வரலாம்... பயம் வேண்டாம்.. | காமத்துக்கு மரியாதை - 225
எல்லோருக்குமே முதலிரவு என்பது வாழ்க்கையில் மறக்க முடியாத மகிழ்ச்சியான ஒருநாள் தான். ஆனால், எங்கோ ஒரு சிலருக்கு மட்டும் அது உயிர் போய்விடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தி விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை விவரிக்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.
’’கிட்டத்தட்ட நள்ளிரவு நேரம். ஒரு போன்கால். ’டாக்டர் என் மகனுக்கு உயிர் நிலையில இருந்து ரத்தமா வருது. அவனுக்கு இன்னிக்குத்தான் கல்யாணமாச்சு டாக்டர். உங்க ஹாஸ்பிடலுக்கு பக்கத்துல வந்துக்கிட்டிருக்கோம். ப்ளீஸ் உடனே வாங்க டாக்டர்’ என்று அழுகிற மாதிரி பேசினார் அவர். அந்த மணமகனுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை என் அனுபவத்தில் பலமுறை பார்த்திருப்பதால், ‘உங்க மகனோட உயிருக்கு ஓர் ஆபத்தும் இல்லீங்க. தைரியமா இருங்க’ என்று அவரை சமாதானப்படுத்தி விட்டு, மருத்துவமனைக்குச் சென்றேன்.
அந்த மணமகனின் பட்டு வேட்டியெல்லாம் ரத்தக்கறையாக இருந்தது. அவருடன் வந்திருந்த உறவினர்கள் எல்லோரும் அழுது விடுகிற நிலையில் இருந்தார்கள். உடனடியாக அந்த மணமகனுக்கு தையல் போட்டு ரத்தப்பெருக்கை நிறுத்தும் சிகிச்சையை செய்ய ஆரம்பித்தேன்.
ஆணுறுப்பின் கீழ்ப்பகுதியில் தோலும் தசையும் இணைந்த பகுதி ஒன்று இருக்கும். இந்தப் பகுதியில் தோல் மிகவும் லேசாக ஒட்டிக்கொண்டிருக்கும். இந்தப் பகுதியை ஃப்ரூன்லம் (frenulum) என்போம். முதலிரவின்போது முதல் முறையாக உறவுக்கு முயலும்போது முன்தோல் வேகமாக பின்னுக்குத் தள்ளப்படும். அப்போது சிலருக்கு ஃப்ரூன்லம் கிழிந்து, அங்கிருக்கும் ரத்தக்குழாய் கட் ஆகி ரத்தம் பீய்ச்சியடிக்க ஆரம்பிக்கும்.100 மி.லி, 200 மி.லி ரத்தம்கூட வெளியேறலாம். அந்த மணமகனுக்கும் அப்படித்தான் நடந்திருக்கிறது. முதலிரவின்போது ஆணுறுப்பில் இருந்து ரத்தம் வரும் என்பது பலரும் அறியாத தகவல் என்பதால்தான், மொத்த குடும்பமும் பயந்துவிட்டிருக்கிறது.
சில ஆண்களுக்கு ஆணுறுப்பின் முன்தோல் மட்டும் கிழிந்து விடும். அவர்களுக்கு லேசான ரத்தப்போக்கு இருக்கும். அவர்களுக்கு சிறிது நேரத்தில் ரத்தக்கசிவு தானாகவே நின்றுவிடும். இந்தப் பிரச்னைகள் நூறு தம்பதியரில் 2 அல்லது 3 பேருக்குத்தான் நிகழும். இன்னும் பத்து, பதினைந்து நாள்களில் கிழிந்த இடம் ஆறி விடும். அதன்பிறகு, உறவு கொள்ளுங்கள் என்று சொல்லி அந்த மணமகனை அனுப்பி வைத்தேன்’’ என்கிற டாக்டர் காமராஜ், முதலிரவு அன்று ஃப்ரூன்லம் கட் ஆனவர்களுக்கு சில அறிவுரைகளையும் பகிர்ந்தார்.
’’ஃப்ரூன்லம் கட் ஆனவர்களுக்கு, அந்தப்பகுதி ஆறிய பிறகும், பலவீனமாகவே இருக்கும். உறவுக்கு முயன்றால் சிலருக்கு மறுபடியும் கட் ஆகலாம். அரிதாக சிலருக்கு திரும்பத் திரும்ப கட் ஆகலாம். அவர்கள் தாம்பத்திய உறவு கொள்வதற்கே பயப்பட ஆரம்பிப்பார்கள். அவர்களுக்கு சில பயிற்சிகள் மூலம் பயத்தை தணிப்போம். அவருடைய மனைவிக்கு டயலேட்டர் உதவியுடன் பெண்ணுறுப்பின் உறவுப்பாதையை சற்று பெரிதுபடுத்துவோம். இது உறவின்போது, ஆணுக்கு செளகரியமான உணர்வை ஏற்படுத்தும்'' என்கிறார் டாக்டர் காமராஜ்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...