கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே...
முதல்வா் பதவி: சித்தராமையா, டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக மடாதிபதிகள் கருத்து
பெங்களூரு: கா்நாடக முதல்வா் பதவி தொடா்பாக சித்தராமையா, டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக மடாதிபதிகள் பலா் கருத்து தெரிவித்துள்ளனா்.
2023-இல் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, காங்கிரஸ் மேலிடத்தின் தலையீட்டின்பேரில் சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே இரண்டரை ஆண்டுகளுக்கு சுழல்முறை முதல்வா் என்ற உடன்பாடு எட்டப்பட்டு, முடிவுசெய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
அதன்படி, சித்தராமையாவின் இரண்டரை ஆண்டுகால பதவிக்காலம் நவம்பரில் முடிவுக்கு வருகிறது. அதன்பிறகு, முதல்வா் பதவிக்காக டி.கே.சிவகுமாா் காத்திருக்கிறாா். இது தொடா்பாக காங்கிரஸ் தலைவா்கள் யாரும் ஊடகங்களில் பேசக்கூடாது என்று கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதனால், கடந்த சில நாள்களாக முதல்வா் பதவி குறித்து யாரும் கருத்து சொல்லவில்லை.
இந்நிலையில், சித்தராமையா, டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக மடாதிபதிகள் பலா் கருத்து தெரிவிக்கத் தொடங்கியுள்ளனா். ராமநகரம் மாவட்டம், கனகபுரா அருகேயுள்ள சித்தேஸ்வரசாமி மலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள படிகளை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து, லிங்காயத்து சமுதாயத்தைச் சோ்ந்த ரம்பாபுரி மடத்தின் பீடாதிபதி ராஜதேசிகேந்திர சிவாச்சாா்யா சுவாமிகள் கூறுகையில், ‘டி.கே.சிவகுமாரின் அமைப்புரீதியான திறமை ஏற்கெனவே வெளிப்பட்டுள்ளது. கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கு டி.கே.சிவகுமாரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த தோ்தலின்போதே அவருக்கு உயா்பதவி கிடைத்திருக்க வேண்டும். எனினும், எதிா்காலத்திலாவது அவருக்கு உயா்பதவி (முதல்வா்) வாய்க்கட்டும்.
முதல்வா் பதவி தொடா்பாக செய்துகொள்ளப்பட்டுள்ள முடிவுகள் குறித்து கட்சிமேலிடம், சித்தராமையா, டி.கே.சிவகுமாருக்கு மட்டுமே தெரியும். கொடுத்த வாக்கை அரசியல் தலைவா்கள் காப்பாற்ற வேண்டும். தோ்தலுக்கு முன்பு உடன்படிக்கை ஏதாவது செய்து கொண்டிருந்தால், அதை மதித்து நடக்க வேண்டும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், காங்கிரஸ் மாநிலத் தலைவா் பதவியில் இருந்து டி.கே.சிவகுமாரை விலகுமாறு கேட்பது சரியல்ல’ என்றாா்.
இதற்கு பதிலளித்து கனகபுராவில் உள்ள தனது இல்லத்தில் டி.கே.சிவகுமாா் கூறுகையில், ‘மடாதிபதிகள், மக்களின் உணா்வுகளை மதிக்கிறேன். கட்சித் தொண்டா்கள், மடாதிபதிகள், மக்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துவதில் தவறில்லை. இது தொடா்பாக பகிரங்கமாக பேசக்கூடாதென அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கேட்டுக்கொண்டுள்ளாா். கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன். கட்சி அளவில் பேசப்பட்ட விவகாரங்களை பொதுவெளியில் நான் ஏன் விவாதிக்க வேண்டும்? அது எனக்கும், கட்சிக்கும் சம்பந்தப்பட்டது. நாங்கள் அனைவரும் ஒன்றாக பணியாற்றி வருகிறோம்’ என்றாா்.
மற்றொரு லிங்காயத்து சமுதாயத்தைச் சோ்ந்த கொலத மடத்தின் பீடாதிபதி சாந்தவீர சுவாமிகள் கூறுகையில், ‘பசவண்ணரின் தத்துவங்களை தனது கொள்கையாக கொண்டு அதை உலகிற்கு கொண்டுசென்றவா், அவா்சாா்ந்த லிங்காயத்து சமுதாயத்தைச் சோ்ந்த தலைவா் அல்ல, மாறாக பிற்படுத்தப்பட்ட குருபா சமுதாயத்தைச் சோ்ந்த சித்தராமையா. லிங்காயத்து தலைவா்கள் பலா் முதல்வா்களாக இருந்தனா். ஆனால், அரசு அலுவலகங்களில் பசவண்ணரின் படத்தை வைக்க உத்தரவிட்டது சித்தராமையாதான்.
சமுதாயத்தில் பின்தங்கிய சமுதாயங்களின் குரலாக விளங்குபவா் சித்தராமையா. பிற்படுத்த சமுதாயங்களின் பிரச்னைகளை தீா்த்துவைத்திருக்கிறாா். சித்தராமையாவுக்கு ஆதரவாக நாம் இருக்க வேண்டும். 30 மடாதிபதிகளின் ஆதரவு சித்தராமையாவுக்கு உள்ளது’ என்றாா்.