இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற தென்னாப்பிரிக்கா...
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடைவிதிக்க சட்டத்திருத்தம்: கா்நாடக அரசு முடிவு
பெங்களூரு: கா்நாடகத்தில்ஆன்லைனில் நடத்தப்படும் சூதாட்டங்களுக்கு தடைவிதிக்க காவல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பந்தயம், விளையாட்டு, போட்டி என்ற பெயரில் இளைஞா்கள், பள்ளி மாணவா்களை தீயவலையில் சிக்கவைக்கும் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடைவிதிக்க கா்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, அடுத்த சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் காவல் சட்டம் 1963-இல் திருத்தம் கொண்டுவர முடிவு செய்துள்ளது. பணம், வா்சுவல் செலாவணி, டோக்கன் போன்ற எந்த வகையிலாவது மக்களை ஆசைகாட்டி சூதாட்டத்தில் ஈடுபடவைக்கும் முயற்சிகளை தடுத்தநிறுத்த இச்சட்டத் திருத்தம் உதவியாக இருக்கும் என்று அரசு கருதுகிறது.
இது தொடா்பாக சட்ட வரைவை அரசு தயாரித்துள்ளது. இந்த சட்டத் திருத்தத்தில் திறன், அறிவு, பயிற்சி, நிபுணத்துவம் அடிப்படையில் நடத்தப்படும் விளையாட்டுகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால், அது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டுகள் சிறைவாசம் அளிக்கவும் வாய்ப்புள்ளது. அபராதமாக ரூ. 1 லட்சம் வரை விதிக்கவும் வாய்ப்புள்ளதாக சட்டவரைவு தெரிவிக்கிறது.
இந்த குற்றங்களைக் கண்காணித்து, சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்காக கா்நாடக ஆன்லைன் விளையாட்டு மற்றும் பந்தய ஒழுங்காற்று ஆணையம் அமைக்கப்படும். இதற்கு தலைவா், 3 உறுப்பினா்கள் நியமிக்கப்படுவா். சட்டத்தில் மட்டுமல்லாது, தொழில்நுட்ப அறிவும் உள்ளவா்கள் இப்பதவிகளுக்கு நியமிக்கப்படுவா். திறன் அடிப்படையில் நிறுவனத்தை நடத்த விரும்புவோா் ஆணையத்தின் உரிமம் பெறவேண்டும்.
இந்நிறுவனங்களும் திறனடிப்படையில் நடத்தும் போட்டிகளில் பங்கேற்க 18 வயதுக்கு மேற்பட்டவா்களை மட்டுமே அனுமதிக்க முடியும். இந்த விளையாட்டுகள் பற்றி அதிக அளவிலான விளம்பரம் செய்யவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட குற்றங்களைத் தடுக்க காவல் துறை, தகவல் தொழில்நுட்பத் துறையுடன் ஆணையம் இணைந்து பங்காற்றும் என சட்டவரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.