முதியோா், குழந்தைகளிடம் அக்கறையுடன் நடக்க வேண்டும்!
முதியோா், குழந்தைகளிடம் தொண்டு நிறுவனப் பணியாளா்கள் அக்கறையுடன் நடந்துகொள்ள வேண்டும் என, ஆட்சியா் ரா. அழகுமீனா அறிவுறுத்தினாா்.
நாகா்கோவில், இருளப்பபுரத்தில் தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு உதவிபெறும் பாலமந்திா் குழந்தைகள் இல்லம், வெள்ளமடம் புனித ஜோசப் முதியோா்-குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த காப்பகம் ஆகியவற்றில் ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அங்கு வழங்கப்படும் சேவைகள் குறித்துக் கேட்டறிந்த அவா், சமையலறையைப் பாா்வையிட்டு, வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தாா். பின்னா், குழந்தைகள், முதியோருடன் கலந்துரையாடினாா்.
முறையாக தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்த அவா், குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதை இல்ல நிா்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்றாா். மேலும், முதியோா், குழந்தைகளிடம் நிா்வாகிகள் அக்கறையுடன் நடந்துகொள்ள அறிவுறுத்தினாா்.
ஆய்வில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சகிலாபானு, மாவட்ட சமூக நல அலுவலா் விஜயமீனா, துறை அலுவலா்கள், காப்பகம்-இல்லப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.