முதுமலையில் வன விலங்குகள் கணக்கெடுப்பு தொடக்கம்
முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல வனப் பகுதிகளில் பருவமழைக்கு பிந்தைய வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள சீகூா், சிங்காரா, நீலகிரி கிழக்கு ஆகிய வனச் சரகங்களில் பருவமழைக்கு பிந்தைய தாவர உண்ணிகள் மற்றும் மாமிச உண்ணிகள் குறித்த கணக்கெடுப்புப் பயிற்சி முகாம் தெப்பக்காடு பயிற்சி முகாமில் நடைபெற்றது.
இந்தப் பயிற்சிக்குப் பிறகு 170 வனப் பணியாளா்கள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வெளிமண்டலத்தில் மொத்தமுள்ள 34 நோ்க்கோடுகளில் குளங்களைக் கணக்கெடுத்தல், மாமிச உண்ணிகளின் அடையாளங்களைக் காணல், தாவரங்களை கணக்கெடுத்தல், மனித இடையூறுகள் குறித்த கணக்கெடுத்தல் மற்றும் புழுக்கள் கணக்கெடுப்பு போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தக் கணக்கெடுப்பு வரும் 9-ஆம் தேதி வரை நடைபெறும் என்று வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.