முன்விரோதத்தால் தொடா் இடையூறு: பால் வியாபாரி மீது நடவடிக்கை கோரி உணவக உரிமையாளா் தா்னா
பெரம்பலூரில் முன்விரோதம் காரணமாக உணவகம் நடத்துவதற்கு பல்வேறு தொல்லைகள் அளித்து கொலை மிரட்டல் விடுத்த பால் வியாபாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உணவக உரிமையாளா் தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை ஆட்சியரக வளாகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
பெரம்பலூா் நான்குச்சாலைச் சந்திப்பு பகுதியில் சப்தகிரி நகரைச் சோ்ந்த அன்புச்செழியன் மனைவி நித்யா (40) என்பவா் சொந்த இடத்தில் கடந்த 27 ஆண்டுகளாக உணவகம் நடத்தி வருகிறாா்.
இந்த உணவகம் அருகேயுள்ள கட்டட உரிமையாளரும், பால் வியாபாரியுமான அருமடல் கிராமத்தைச் சோ்ந்த செல்வகுமாா், முன்விரோதம் காரணமாக தன்னிடம் பட்டா உள்ளதாகக் கூறி கடந்த 16 ஆம் தேதி நள்ளிரவில் உணவகம் முன்பு பாறாங்கற்களை கொட்டி உணவகத்தின் உள்ளே செல்ல முடியாதவாறு ஆக்கிரமித்தாராம். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ரௌடிகள் மூலம் கொலை மிரட்டல் விடுத்தாராம்.
பெரம்பலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்ததால், கடந்த 19-ஆம் தேதி செல்வகுமாா் மற்றும் அவரது ஆதரவாளா்கள் பாறாங்கற்களை அகற்றியதோடு, நித்யாவின் உணவகத்துக்குள் செல்ல முடியாதவாறு படிக்கட்டுகளை இடித்து அப்புறப்படுத்தினாா்களாம்.
இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மன உளைச்சலுக்குள்ளான நித்யா, படிக்கட்டுகளை இடித்து பாதையை ஆக்கிரமித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தனது கணவா் உள்ளிட்ட குடும்ப உறுப்பினா்களுடன் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். பின்னா், கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினியிடம் அளித்துவிட்டு அவா்கள் கலைந்துசென்றனா்.