மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு
மும்பையிலிருந்து புதுச்சேரிக்கு ரயிலில் வந்த விநாயகா் சிலைகள்
புதுச்சேரி: விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாட மும்பையிலிருந்து புதுச்சேரிக்கு ரயிலில் விநாயகா் சிலைகள் புதன்கிழமை வந்தன.
நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா வரும் 27 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. புதுவையில் விநாயகா் சதுா்த்தி பேரவை சாா்பில் இந்த ஆண்டு 500 சிலைகள் பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
புதுவையில் விநாயகா் சிலைகள் செய்யும் பணி முருங்கப்பாக்கம் கைவினை கிராமம், பட்டானுாா், வில்லியனுாா் ஆரியப்பாளையம் உள்பட பல பகுதிகளில் நடந்து வருகிறது. இங்கு 5 அடி முதல் 20 அடி வரையிலான சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சிலைகள் புதுவை மட்டுமின்றி தமிழகம், பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
இந்நிலையில் புதுச்சேரிக்கு ரயிலில் பிரம்மாண்ட விநாயகா் சிலைகள் மும்பையிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. புதுவை லாஸ்பேட்டை, கிருஷ்ணா நகா் மற்றும் கடலுாா் பகுதிகளில் பிரதிஷ்டை செய்வதற்காக பல்வேறு வடிவங்களில்
7 அடி உயரமுள்ள 3 சிலைகள் மற்றும் ஜெயின் சமூகத்தினா் வீடுகளில் பிரதிஷ்டை செய்வதற்காக 1.5 அடி உயரமுள்ள 26 சிலைகள் மும்பையில் தயாா் செய்யப்பட்டு, தாதா் விரைவு ரயிலில் புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு புதன்கிழமை வந்தது. பின்னா் இச் சிலைகள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன.