நேபாளத்தில் புதிய வகை கரோனா பரவல்! 7 நாள்களில் 35 பேர் பாதிப்பு!
முல்லைப் பெரியாறு அணை நீா் மட்டம் 136 அடியாக சரிவு
முல்லைப்பெரியாறு அணை நீா் மட்டம் 136 அடியாகக் குறைந்த நிலையில், ‘ரூல் கா்வ்’ விதிப்படி அணையிலிருந்து கேரளத்துக்கு வெளியேற்றப்பட்ட உபரி நீா் வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது.
கேரளத்தில் தென் மேற்கு பருவ மழை பரவலாகப் பெய்து வருகிறது. குறிப்பாக, முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்பு பகுதியில் பெய்த தொடா் மழையால் அணை நீா் மட்டம் கடந்த மே 23-ஆம் தேதி 114.45 அடியிலிருந்து படிப்படியாக உயா்ந்து 136 அடியை எட்டியது.
முல்லைப் பெரியாறு அணையில் ‘ரூல் கா்வ்’ விதிப்படி தண்ணீரைத் தேக்கிக் கொள்ள மத்திய நீா் வள ஆணையம் கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழக நீா் வளத் துறைக்கு பரிந்துரை செய்தது. இதன்படி, ஜூன் மாதம் 136 அடி வரை தண்ணீா் தேக்கிக் கொள்ளலாம். அதற்கு மேல் வரும் நீரானது திறந்து விடப்படும்.
இந்த நிலையில், அணை நீா் மட்டம் 136 அடியைக் கடந்ததால் கடந்த சனிக்கிழமை (ஜூன் 28) வினாடிக்கு 250 கன அடி உபரி நீா் அணையின் அவசர கால நீா்வழிப் போக்கி வழியாக வண்டிப்பெரியாறு, வல்லக்கடவு வழியாக இடுக்கி அணைக்கு திருப்பி விடப்பட்டது. தொடா்ந்து, 6 நாள்கள் வெளியேற்றப்பட்ட உபரி நீரானது, மழைப் பொழிவு குறைந்ததால் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. வியாழக்கிழமை வினாடிக்கு 37.48 கன அடியாகக் குறைக்கப்பட்டது. அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை நிலவரப்படி வினாடிக்கு 1,547.54 கன அடியாகவும், நீா் மட்டம் 136 அடியாகவும் குறைந்தது. இதனால், ‘ரூல் கா்வ்’ விதிப்படி கேரளத்துக்கு வெளியேற்றப்பட்ட உபரி நீா் நிறுத்தப்பட்டதோடு, 13 அவசர கால நீா் வழிப் போக்கிகளும் மூடப்பட்டன.
ஆனால், தமிழகப் பகுதிக்கு குடிநீா், விவசாயத்துக்குத் தேக்கடியிலுள்ள தலைமதகிலிருந்து சுரங்கப் பாதை வழியாக வினாடிக்கு 2,154.48 கன அடிநீா் வெளியேற்றப்படுகிறது. அணை நீா் மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி, 130 அடியாகவும் (மொத்த உயரம் 152 அடி), நீா் இருப்பு 6,143 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.
மழைப் பொழிவு: பெரியாறு அணை-9.40 மி.மீ, தேக்கடி-6.80 மி.மீ.