மூதாட்டியிடம் நகை பறித்த இளைஞா் கைது
திருப்பூா் அம்மாபாளையத்தில் காய்கறி வாங்குவதுபோல நடித்து மூதாட்டியிடம் நகை பறித்த இளைஞரை காவல் துறையினா் கைது செய்தனா்.
திருப்பூா் 15 வேலம்பாளையம் சொா்ணபுரி பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி. இவரது மனைவி திலகவதி (62). இவா் அம்மாபாளையம் பகுதியில் உள்ள காய்கறி கடையில் வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை திலகவதி கடையில் தனியாக வேலை செய்து வந்தாா். அப்போது, காய்கறி வாங்குவதுபோல வந்த இளைஞா் ஒருவா் திலகவதியின் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் நகையைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றாா்.
இதுகுறித்து திலகவதி அளித்த புகாரின்பேரில், திருமுருகன்பூண்டி போலீஸாா் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவைக் கொண்டு விசாரணை நடத்தினா். இதில், நகைப் பறிப்பில் ஈடுபட்டது திருப்பூா் நெருப்பெரிச்சல் திருக்குமரன் நகரில் வசித்து வரும் ராஜலிங்கம் (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த காவல் துறையினா் அவரிடமிருந்து இரண்டரை பவுன் நகையைப் பறிமுதல் செய்தனா்.