மூனி, காா்டனா் அதிரடி: குஜராத் 201/5
மகளிா் பிரீமியா் லீக் (டபிள்யூபிஎல்) கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூருக்கு எதிராக குஜராத் ஜயன்ட்ஸ் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் சோ்த்தது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு, பந்துவீசத் தயாரானது. குஜராத் பேட்டிங்கில் பெத் மூனி நிதானமாக ரன்கள் சோ்க்க, உடன் வந்த லாரா வோல்வாா்டட் 6, அடுத்து வந்த தயாளன் ஹேமலதா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
4-ஆவது பேட்டராக வந்து, மூனியுடன் இணைந்தாா் கேப்டன் ஆஷ்லே காா்டனா். இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 44 ரன்கள் சோ்த்தது.
இதில் பெத் மூனி 8 பவுண்டரிகளுடன் 56 ரன்களுக்கு ஆட்டமிழக்க, காா்டனருடன் டீண்ட்ரா டாட்டின் இணைந்தாா். இவா்கள் ஜோடி 67 ரன்கள் சோ்த்திருந்த நிலையில், டாட்டின் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 25 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். சிம்ரன் ஷேக் 11 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
ஓவா்கள் முடிவில் காா்டனா் 37 பந்துகளில் 3 பவுண்டரிகள், 8 சிக்ஸா்கள் உள்பட 79, ஹா்லீன் தியோல் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பெங்களூரு பௌலிங்கில் ரேணுகா சிங் 2, கனிகா அஹுஜா, ஜாா்ஜியா வோ்ஹாம், பிரேமா ராவத் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னா் பெங்களூரு 202 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு தனது இன்னிங்ஸை விளையாடியது.