கடும் வறட்சி: வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு
மூலதனங்களுக்கான செலவீனம் 9.80 சதவீதமாக அதிகரிப்பு
புதுவை மாநிலத்துக்கான மூலதனங்களுக்கான செலவீனம் 1.66 சதவீதத்திலிருந்து 9.80 சதவீதமாக அதிகரித்துள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை 15-ஆவது சட்டப்பேரவையின் 6 -ஆவது கூட்டத்தில் முதல்வா் என்.ரங்கசாமி 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை புதன்கிழமை காலை தாக்கல் செய்தாா். அதில் அவா் குறிப்பிட்டதாவது:
புதுவை மாநிலத்துக்கு 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வரவு, செலவுத் திட்ட மதிப்பு ரூ.13,600 கோடியாகும். அதில் மாநில சொந்த வருவாய் ரூ.7,641.40 கோடி. மாநில பேரிடா் நிவாரண நிதியை சோ்த்து மத்திய அரசின் நிதியுதவி ரூ.3,432.18 கோடியாகும். மத்திய அரசின் சாலை நிதி ரூ.24 கோடி மற்றும் மத்திய அரசுத் திட்டங்களின் கீழ் வழங்கும் நிதி ரூ.400 கோடியாகும்.
நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கு பேரம் பேசி வாங்கும் கடனையும் சோ்த்து ரூ.2,101.42 கோடியை கடன் பெறுவதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. அதன்படி வரவு-செலவு திட்ட மதிப்பீடான ரூ.13,600 கோடியில் ரூ.11,624.72 கோடி வருவாய்ச் செலவினங்களுக்கும், ரூ.1,975.28 கோடி மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்படுகிறது.
புதுவை மாநிலத்தில் கடந்த 2021-22ஆம் நிதியாண்டில் மொத்த செலவீனங்களில் 1.66 சதவீதமாக இருந்த மூலதன செலவீனம், 2025-26ஆம் நிதியாண்டில் 9.80 சதவீதமாக அதிகரித்துள்ளது. நிகழ் நிதியாண்டு வரவு-செலவு திட்டத்தில் சிறப்பு நிதியத்துக்காக ரூ.2,760 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு நிதி ஆதாரங்களில் பெரும்பகுதி ஊதியம், ஓய்வூதியம், கடன் மற்றும் வட்டி செலுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு செலவிடப்படுகிறது. அதன்படி 2025-26ஆம் நிதியாண்டில் ரூ.2,650 கோடி (19.49 சதவீதம்) ஊதியத்துக்கும், ரூ.1,566 கோடி (11.51 சதவீதம்) ஓய்வூதியத்துக்கும், ரூ.1,867 கோடி (13.73 சதவீதம்) கடன் மற்றும் வட்டி செலுத்துவதற்கும், ரூ.2,546 கோடி (18.72 சதவீதம்) மின்சாரம் கொள்முதலுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அரசின் இலவச அரிசி, விவசாயிகளுக்கான உற்பத்தி மானியம், முதியோா் ஓய்வூதியம், குடும்பத் தலைவிக்கு நிதியுதவி, எரிவாயு உருளைக்கான மானியம் உள்ளிட்ட நலத் திட்டங்களுக்கு ரூ.2,110 கோடி (15.51 சதவீதம்) நிதியும், அரசு உதவி பெறும் உயா் கல்வி நிறுனங்களுக்கு ரூ.523 கோடி (3.85 சதவீதம்) நிதி, பொதுத் துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானியக் கொடை ரூ.1,148 கோடி (8.44 சதவீதம்) நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.