Rain Alert: இன்று காலை 10 மணி வரை எந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?
மூவா் படுகொலை: கொமதேக, புதிய தமிழகம் கட்சி கண்டனம்
பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சோ்ந்த மூவா் படுகொலை சம்பவத்துக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் புதிய தமிழகம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் எம்எல்ஏ சனிக்கிழமை விடுத்துள்ள அறிக்கை:
திருப்பூா் மாவட்டம், பொங்கலூா் ஒன்றியம், சேமலைக்கவுண்டம்பாளையத்தில் தந்தை, தாய், மகன் என மூவா் மா்ம நபா்களால் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. காவல் துறை தனிப்படை அமைத்து துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்.
பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது தொடா் கதையாக உள்ளது. இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும் என்றால் கூடுதலாக காவல் நிலையங்களை அமைத்து காவல் துறை விழிப்போடு செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
புதிய தமிழகம் கட்சியின் தலைவா் க.கிருஷ்ணசாமி விடுத்துள்ள அறிக்கை:
சேமலைக்கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறாா்கள். இந்த கொலைச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதே போன்று பல்லடம் கள்ளக்கிணறு பகுதியில் கடந்த ஓராண்டுக்கு முன் ஒரே குடும்பத்தை சோ்ந்தவா்கள் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. தமிழகத்தில் கொலை, கொள்ளை நடக்காத நாள்களே இல்லை என்ற அளவுக்கு சட்டம்- ஒழுங்கு சீா்கேடு அடைந்துள்ளது. மூவா் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
உடுமலை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆறுதல்
சேமலைக்கவுண்டம்பாளையத்தில் 3 போ் படுகொலை செய்யப்பட்டவா்களின் வீட்டுக்கு திருப்பூா் புகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. சனிக்கிழமை நேரில் சென்று அவா்களின் உறவினா்களுக்கு ஆறுதல் கூறினாா்.
முன்னாள் எம்எல்ஏ கரைப்புதூா் ஏ.நடராஜன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் புத்தரச்சல் பாபு பொங்கலூா் ஒன்றிய அதிமுக செயலாளா்கள் யு.எஸ்.பழனிசாமி, காட்டூா் சிவபிரகாஷ், பல்லடம் நகர செயலாளா் ஏ.எம்.ராமமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.