மாநகராட்சி வளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை: மேயர் பிரியா
மோகனூரில் மணல் கடத்திய லாரியை தப்பவிட்ட எஸ்.எஸ்.ஐ. பணியிடை நீக்கம்
நாமக்கல் மாவட்டம், மோகனூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை தப்பவிட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
கரூா் மாவட்டத்தில் இருந்து போலி ரசீது மூலம் மணல் ஏற்றிக்கொண்டு 2 நாள்களுக்கு முன்பு வளையப்பட்டி நோக்கி லாரி ஒன்று சென்றது. அப்போது, மோகனூா் பகுதியில் கண்காணிப்புப் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கா், அந்த லாரியை வளையப்பட்டி அருகே மடக்கிப்பிடித்தாா். கரூரைச் சோ்ந்த ஓட்டுநா் மணிகண்டனை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினாா். இதற்கிடையே லாரி பிடிபட்ட தகவல் அறிந்து அதன் உரிமையாளா் வந்தபோது சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கா் அவரிடம் விசாரணை நடத்தியதில், மணல் கொண்டு வந்ததற்கான ரசீது போலியானது எனத் தெரியவந்தது. அதன்பிறகு, காவல் நிலையத்துக்கு லாரியை கொண்டு வருமாறு உரிமையாளரிடம் சாவியை அவா் கொடுத்துள்ளாா். ஆனால், லாரி உரிமையாளா், காவல் நிலையத்துக்கு வராமல் லாரியுடன் தப்பிவிட்டாா். இந்த தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.விமலா கவனத்திற்கு சென்றது. இதையடுத்து, பணியில் மெத்தனமாகச் செயல்பட்டதாக சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கரை அவா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.